செய்திகள்
பிரதமர் மோடி

கொரோனா பரவலை கட்டுப்படுத்த 7 மாநில முதல்-மந்திரிகளுக்கு மோடி யோசனை

Published On 2020-09-23 21:17 GMT   |   Update On 2020-09-23 21:17 GMT
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மைக்ரோ என்னும் மிகச்சிறிய அளவிலான கட்டுப்பாட்டு மண்டலங்களை அமைத்து கவனம் செலுத்த வேண்டும் என்று 7 மாநில முதல்-மந்திரிகளுக்கு பிரதமர் மோடி யோசனை கூறினார்.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால், உலகளவில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றில் இருந்து விடுபடுவதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோரில், 63 சதவீதம் பேர் மராட்டியம், ஆந்திரா, கர்நாடகம், உத்தரபிரதேசம், தமிழகம், டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

நாட்டில் மொத்தம் பாதிப்புக்குள்ளானோரில் 65.5 சதவீதம்பேர், இந்த 7 மாநிலங்களை சேர்ந்தவர்கள்தான். அதுமட்டுமல்ல, மொத்த உயிரிழப்புகளில் 77 சதவீதம் பேர், இந்த 7 மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை இந்த 7 மாநிலங்களில் கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழகம் உள்ளிட்ட 7 மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி காட்சி வழியாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சம்மந்தப்பட்ட மாநிலங்களின் சுகாதார மந்திரிகளும் கலந்து கொண்டார்கள்.

அப்போது பிரதமர் மோடி பேசியபோது கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒன்றல்லது 2 நாட்கள் ஊரடங்கு பயனுள்ளதா என்பதை மாநிலங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். கொரோனாவுக்கு எதிராக போராடும் நேரத்தில், பொருளாதார நடவடிக்கைகளை திறப்பதிலும் முழுபலத்துடன் செயல்பட அழுத்தம் தர வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு மைக்ரோ (மிகச்சிறிய அளவிலான) கட்டுப்பாட்டு மண்டலங்கள், முன்னோக்கி செல்லும்பாதையாக இருக்க வேண்டும், ஏனெனில் இது தொற்று பரவலை தடுக்கும். மேலும் நடவடிக்கைகளை தொடர அனுமதிக்கும்.

தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பயனுள்ள சோதனை, தடமறிதல், சிகிச்சை, கண்காணிப்பு மற்றும் தெளிவான செய்தியிடல் ஆகியவற்றில் மாநிலங்கள் கவனத்தை மேலும் அதிகரிக்க வேண்டும்.

பெரும்பாலான கொரோனா நோயாளிகள் அறிகுறிகள் இன்றி இருக்கிறார்கள். எனவே வதந்திகள் பரவுவதாலும், சோதனை தவறாக இருந்தால் சாதாரண மனிதர்கள் ஆச்சரியப்படுவதாலும் பயனுள்ள செய்தியிடல் மிக முக்கியமானது. சிலர் தொற்று நோயின் தீவிரத்தை குறைத்து மதிப்பிட்டு தவறு செய்கிறார்கள். அதே நேரத்தில் ஒரு பயனுள்ள செய்தியிடலின் தேவையை தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்.

மருந்துகள் ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு செல்வதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும்.

ஆரம்ப காலத்தில் தேசிய அளவிலான ஊரடங்குகள் நல்ல பலனைத் தந்தன. இப்போது நமது கவனம், மைக்ரோ கட்டுப்பாட்டு மண்டலங்களில் இருக்க வேண்டும்.

மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 50 சதவீத நிதியை கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு மாநிலங்கள் செலவு செய்யலாம் என்று அறிவிக்கிறேன். முன்பு இது 35 சதவீதமாக இருந்தது.

முக கவசங்களை அனைவரும் அணிவதின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். இது கொரோனாவுக்கு எதிரான போரில் மிக முக்கிய கருவியாக அமைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News