செய்திகள்
அஸ்வின் - விராட் கோலி

இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா? கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்

Published On 2021-09-09 07:42 GMT   |   Update On 2021-09-09 07:42 GMT
14 ஆண்டுகளுக்கு பிறகு விராட்கோலி தலைமையிலான அணி இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி புதிய சரித்திரம் படைக்கும் ஆர்வத்தில் உள்ளது.

மான்செஸ்டர்:

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் தொடரில் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் டிரா ஆனது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 151 ரன் வித்தியாசத்திலும், ஓவலில் நடந்த 4-வது டெஸ்டில் 157 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.

லீட்சில் நடந்த 3-வது டெஸ்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 76 ரன் வித்தியாசத்தில் வென்றது. இதனால் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நாளை (10-ந் தேதி) தொடங்குகிறது.

இந்த டெஸ்டிலும் வெற்றி பெற்று இந்தியா 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் பின் தங்கி இருந்து பெற்ற வெற்றி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

கடைசி டெஸ்டை டிரா செய்தாலே இந்தியா தொடரை கைப்பற்றிவிடும். இங்கிலாந்து மண்ணில் இதற்கு முன்பு 3 தடவை இந்தியா டெஸ்ட் தொடரை வென்று இருந்தது. 1971-ல் அஜித் வடேகர் தலைமையிலான அணி 1-0 (3 டெஸ்ட்) என்ற கணக்கிலும், 1986-ல் கபில்தேவ் தலைமையிலான அணி 2-0 (3) என்ற கணக்கிலும், 2007-ல் ராகுல் டிராவிட் தலைமையில் 1-0 என்ற கணக்கிலும் (3) கைப்பற்றி இருந்தது.

14 ஆண்டுகளுக்கு பிறகு விராட்கோலி தலைமையிலான அணி இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி புதிய சரித்திரம் படைக்கும் ஆர்வத்தில் உள்ளது.

இந்திய அணியின் பேட்டிங்கில் தற்போது ரகானே மட்டுமே மோசமான நிலையில் உள்ளார். இதனால் அவர் இந்த டெஸ்டில் நீக்கப்படும் நிலையில் உள்ளார். வெற்றி அணி என்பதால் கோலி அதில் மாற்றம் செய்ய மாட்டார் என்ற கருத்து நிலவுகிறது.

அஸ்வினுக்கு இதுவரை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த டெஸ்டிலாவது அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற விவாதம் அதிகமாக எழுந்து வருகிறது. ஒருவேளை அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் ஜடேஜா நீக்கப்படலாம்.

ரோகித்சர்மா ஒரு சதம், 2 அரை சதத்துடன் 368 ரன்னும், ராகுல் ஒரு சதம், ஒரு அரை சதத்துடன் 315 ரன்னும் எடுத்து உள்ளனர். பந்து வீச்சில் பும்ரா 18 விக்கெட்டும், சிராஜ் 14 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.

ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்துஅணிக்கு இந்தடெஸ்டில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. டிரா செய்தாலோ, தோற்றாலோ தொடரை இழந்து விடும். இதனால் தொடரை சமன் செய்ய அந்தஅணி வீரர்கள் வெற்றி பெற கடுமையாக போராடுவார்கள்.

ஜோரூட் 3 சதம், ஒரு அரை சதத்துடன் 564 ரன்கள் குவித்து உள்ளார். அவர் ஒருவரே அணியின் மிகப்பெரிய பலமாக இருக்கிறார்.

இரு அணிகளும் நாளை மோதுவது 131-வது டெஸ்ட் ஆகும். இதுவரை 130 போட்டியில் இந்தியா 31-ல், இங்கிலாந்து 49-ல் வெற்றி பெற்று உள்ளன. 50 டெஸ்ட் டிரா ஆனது.

இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

Tags:    

Similar News