செய்திகள்
புதிய முதல்வர் மற்றும் துணை முதல்வருடன் ஆளுநர்

மகாராஷ்டிரா சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவேண்டும்- உச்ச நீதிமன்றம் உத்தரவு

Published On 2019-11-26 05:20 GMT   |   Update On 2019-11-26 05:20 GMT
மகாராஷ்டிர சட்டசபையில் முதல்வர் பட்னாவிஸ் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நாள் முதல் அரசியல்  குழப்பம் நீடிக்கிறது. பாஜகவுடனான உறவை முறித்த சிவசேனா, எதிர் அணியைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அரசு அமைக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டது. இதற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டதை அடைந்தது. 

ஆனால், கடைசி நேரத்தில் காய் நகர்த்திய பாஜக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவாரின் ஆதரவுடன், சனிக்கிழமை அதிகாலையில் ஆட்சியமைத்தது. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டசபை கட்சி தலைவர் அஜித் பவார் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர்.



பாஜக ஆட்சியமைப்பதற்கு அழைப்பு விடுத்த ஆளுநரின் முடிவுக்கு எதிராக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ்  கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணையின்போது, குதிரை பேரம் நடப்பதை தவிர்க்கும் வகையில் உடனடியாக தேவேந்திர பட்னாவிஸ் அரசு சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

இதற்கு பாஜக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.  பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 14 நாட்கள் அவகாசம் அளித்திருப்பதாகவும், அதை மாற்றி இன்றோ நாளையோ நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி உத்தரவிடக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது. 

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தனர். அதன்படி இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது:-

மகாராஷ்டிரா விவகாரத்தில் அனைத்து விவகாரங்களையும் நன்கு ஆராய்ந்துள்ளோம். ஜனநாயகத்தின் மாண்புகளை காப்பாற்ற நீதிமன்றங்கள் கடமைப்பட்டுள்ளன. முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நாளை மாலை 5 மணிக்குள் சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். எத்தனை எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது என பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். வாக்கெடுப்பை நேரலையில் ஒளிபரப்பு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News