ஆன்மிகம்
தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு காப்பு கட்டிய காட்சியை படத்தில் காணலாம்.

திருப்பரங்குன்றத்தில் 6 வித படையலுடன் தினமும் 2 முறை சண்முகார்ச்சனை

Published On 2021-11-06 04:28 GMT   |   Update On 2021-11-06 04:28 GMT
திருப்பரங்குன்றம் கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி தினமும் 2முறை சண்முகப்பெருமானுக்கு 6 வித படையலுடன் சண்முகார்ச்சனை நடக்கிறது. 9-ந்தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது.
தமிழ் கடவுள் முருகப்பெருமான் குடிகொண்டு அருளாட்சி புரியும் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில். இங்கு கொண்டாடப்படும் திருவிழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் முக்கிய வாய்ந்ததாகும்.

இந்த திருவிழாவில் மட்டும் தான் சுவாமிக்கும், பக்தர்களுக்கும் காப்புக்கட்டுதல் நடைபெறும்.காப்புகட்டும் பக்தர்கள் மிளகு, துளசி, பால் ஆகியவை ஒருவேளை மட்டுமே சாப்பிட்டு கடும் விரதம் இருப்பார்கள்.மேலும் பக்தர்கள் அனைவரும் கோவிலிலேயே 7 நாட்களும் தங்கி இருந்து இருவேளை சரவண பொய்கையில் நீராடி, கிரிவலம் வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்வார்கள்.

ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் 2-வது ஆண்டாக பக்தர்கள் காப்பு கட்டுவதற்கும், கோவிலில் தங்கி இருந்து கடும் விரதம் இருப்பதற்கும் அனுமதி தவிர்க்கப்பட்டுள்ளது. ஆகவே நேற்று முன்தினம் காப்பு கட்டுதலுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது.

அதில் மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமிக்கு காப்பு கட்டுதல் நடந்தது. இதனையடுத்து சண்முகர் சன்னதியில் மேளதாளங்கள் முழங்க தெய்வானை, வள்ளி சமேத சண்முகப் பெருமானுக்கு காப்பு கட்டுதல் நடந்தது. இதனை தொடர்ந்து முருகப்பெருமானின் பிரதியான நம்பி பட்டருக்கு காப்பு கட்டுதல் நடந்தது.

கந்தசஷ்டி திருவிழாவின் சிறப்பு அம்சமாக சண்முகப் பெருமானுக்கு தினமும் காலை 11 மணியளவில், மாலை 5 மணியளவிலும் சண்முகார்ச்சனை நடைபெறும். ஒரே வேளையில் எலுமிச்ச பழசாதம், புளியோதரை சாதம், தேங்காய் சாதம், வெண்பொங்கல் சாதம், வடை சாதம், பால்சாதம் ஆகிய 6 விதமான சாதங்கள் படைத்து சாமிக்கு படையல் செய்யப்பட்டது. மேலும் 6 சிவாச்சாரியர்கள் சுவாமிக்கு மலர்கள் தூவி அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

இந்த நிகழ்வின்போது தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.இதேசமயம் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 8-ந்தேதி வேல்வாங்குதலும், 9-ந்தேதி சூரசம்காரமும், 10-ந்தேதி பாவாடை தரிசனமும் நடக்கிறது.
Tags:    

Similar News