செய்திகள்
தேங்காய் உரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

கொரோனா கட்டுப்பாட்டால் தேங்காய் விலை கடும் வீழ்ச்சி - வியாபாரிகள் வேதனை

Published On 2021-04-30 12:53 GMT   |   Update On 2021-04-30 12:53 GMT
கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் காரணமாக தேங்காய் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்ததால் அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
அணைக்கட்டு:

வேலூர் மாவட்டத்தில் அதிகளவில் தேங்காய் விளைவிக்கப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் தேங்காய்கள் பக்கத்து மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக அண்டை மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தேங்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்து பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தேங்காய் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இது குறித்து தேங்காய் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் தாஜுதீன் கூறுகையில், ‘‘சித்திரை மாதம் என்றாலே தேங்காய் விலை ஏறுமுகத்தில் இருக்கும். வெளிமாநில வியாபாரிகள் அதிகளவில் தேங்காயை வாங்கிச் செல்வார்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சித்திரை மாதங்களில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் வெளி மாநிலங்களுக்கு தேங்காயை ஏற்றுமதி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். உள்ளூரில் வியாபாரம் செய்யலாம் என்றால் திருவிழாக்களும் தடைசெய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வேலூர் மாவட்டம் முழுவதும் தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் சுமார் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்’’ என்றார்.

Tags:    

Similar News