செய்திகள்
விபத்தில் சேதமடைந்த லாரியை படத்தில் காணலாம்

விக்கிரவாண்டி அருகே கார் மீது லாரி மோதல்- 5 பேர் படுகாயம்

Published On 2018-11-03 12:42 GMT   |   Update On 2018-11-03 12:42 GMT
விக்கிரவாண்டி அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விக்கிரவாண்டி:

கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன் ஷிப்பை சேர்ந்தவர் சூர்ய மூர்த்தி(60) இவர் தனது உறவினர் ஒருவர் வெளிநாடு செல்வதால் அவரை வழியனுப்புவதற்காக சென்னை விமானம் நிலையம் செல்ல முடிவு செய்தார்.

அதன் படி இன்று அதிகாலை சூர்ய மூர்த்தி மற்றும் அவரது மனைவி சுநந்தா(55)மற்றும் அவரது உறவினர்கள் ராஜா(28), சுந்தரி(23) ஆகியோர் ஒரு காரில் நெய்வேலி டவுண் ஷிப்பில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டனர்.

அந்த காரை கணேசன்(55) என்பவர் ஓட்டி வந்தார்.

இன்று காலை 5 மணி அளவில் அந்த கார் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த சித்தணி பகுதியில் வந்து கொண்டிருந்தது.

அப்போது அந்த வழியாக சென்னையிலிருந்து இரும்பு கம்பம் ஏற்றி கொண்டு லாரி ஒன்று வந்தது.

அந்த லாரி திடீரென டிரைவரின் கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடி தடுப்பு கட்டையில் மோதி சாலையின் மறுபுறம் சென்று அந்த வழியாக வந்த கணேசன் ஓட்டி வந்த காரின் மீதும் மோதியது.

இதை தொடர்ந்து காரின் பின்னால் வந்த ஆம்னி பஸ்சும் , மற்றொரு லாரியும் ஒன்றன் பின் ஒன்றாக மோதி நின்றன.

இந்த விபத்தில் காரின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கி சேதம் அடைந்தது. இதில் காரில் பயணம் செய்த சூர்ய மூர்த்தி, சுநந்தா, ராஜா, சுந்தரி, கார் டிரைவர் கணேசன் ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.

விபத்தில் சேதமடைந்த காரை படத்தில் காணலாம்

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த விக்கிரவாண்டி போக்குவரத்து போலீசார் மற்றும் சுங்க சாவடி ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம் பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கபடுகிறது. விபத்தின் போது லாரியில் இருந்த இரும்பு கம்பங்கள் சரிந்து கீழே விழுந்தது.

இதனால் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்ல முடியமால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

விபத்து நடந்த சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வரிசையாக நின்ற வாகனங்களை படத்தில் காணலாம்.

உடனே பொக்லைன் எந்திரம் அங்கு வரவழைக்கப்பட்டது. அதன் மூலம் விபத்துக்குள்ளான காரையும், சாலையில் கிடந்த இரும்பு கம்பங்களையும் போலீசார் அப்புறபடுத்தினர். அதன் பின்னர் அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது. #tamilnews
Tags:    

Similar News