செய்திகள்
கொரோனா பரிசோதனை

கோவையில் தொற்று சரிவால் கொரோனா பரிசோதனை குறைப்பு

Published On 2021-06-07 11:16 GMT   |   Update On 2021-06-07 11:16 GMT
கோவையில் மீண்டும் கொரோனா பரவல் குறையத் தொடங்கியது. நோய்த் தொற்று குறைந்து வருவதால் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.

கோவை:

கோவையில் கடந்த மாதம் தொடக்கம் முதல் கொரோனா நோய் தொற்று அதிகரிக்க தொடங்கியது. அப்போது தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்தது. தவிர, தினசரி நோய் தொற்று பாதிப்பில் சென்னையை பின்னுக்குத் தள்ளி கோவை முதலிடத்திற்கு வந்தது.

இந்தநிலையில், நோய்த் தொற்று அதிகரித்து வந்ததால் மாவட்டம் முழுவதும் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டது. வீடு, வீடாக ஆய்வு, கொரோனா சிகிச்சை மையங்கள் அதிகரித்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர் மேற்கொண்டு வந்தனர். அதன் பயனாக கோவையில் மீண்டும் கொரோனா பரவல் குறையத் தொடங்கியது. நோய்த் தொற்று குறைந்து வருவதால் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கோவையில் கொரோனா நோய்த் தொற்று அதிகரிக்க தொடங்கியதுமே கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. அதன் படி, கடந்த வாரங்களில் 12 ஆயிரம் முதல் 13 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது நோய்த் தொற்று குறைந்து வருகிறது. இதனால், அதற்கேற்ப கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரங்களை காட்டிலும் தினசரி பாதிப்பில் 1,500 வரை எண்ணிக்கை குறைந்துள்ளது.

இதனால் பரிசோதனைகளும் 8 ஆயிரம் முதல் 9 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சம் 10 ஆயிரம் வரை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோய்த் தொற்று பாதிப்பிற்கு ஏற்ப இந்த எண்ணிக்கை மாறுபடும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News