ஆன்மிகம்
மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோவில்

ஆனந்தவல்லி சோமநாதர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்தை காண அனுமதிக்க கோரிக்கை

Published On 2021-04-16 07:24 GMT   |   Update On 2021-04-16 07:24 GMT
மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்தை காண அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மானாமதுரையில் சித்திரை திருவிழா என்பது மதுரைக்கு அடுத்தபடியாக சிறப்பாக நடத்தப்படும். இந்த சித்திரை திருவிழா மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோவில், வீரழகர் கோவிலில் நடக்கும். மேலும் திருவிழா நடக்கும் நாட்களில் வைகை ஆற்றில் ராட்டினம், ஆங்காங்கே மண்டகபடிதாரர்கள் சார்பில் நாடகம், கலைநிகழ்ச்சி என களைகட்டும்.

கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் சித்திரை திருவிழா நிறுத்தப்பட்டது. இந்தாண்டு திருவிழா நடக்கும் என்ற நம்பிக்கையில் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் நடந்து வந்தன. இந்தநிலையில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால் பல கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. அதில் கோவில் விழாக்களுக்கு தடைவிதித்துள்ளது. இதையடுத்து மானாமதுரை சித்திரை திருவிழா உள் திருவிழாவாக நடத்தப்படும் எனவும், நாளை(சனிக்கிழமை) கொடியேற்றதுடன் விழா தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவில் திருவிழாவை காண பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் திருவிழாவை நம்பி பிழைப்பு நடத்தும் ராட்டினம் தொழிலாளர்கள், நாடகம் கலைஞர்கள், கலைநிகழ்ச்சி நடத்துவோர் என 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து மானாமதுரை ராட்டினம் தொழிலாளர்கள் கூறுகையில், ஏற்கனவே கடந்த ஆண்டு முழுவதும் கோவில் விழாக்கள் நடக்காமல் இருந்ததால் நாங்கள் உணவிற்கே திண்டாடினோம். கடன்களை அடைக்கவில்லை. அதேபோல் இந்தாண்டும் தடைவிதித்துள்ளதால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் கட்டுப்பாடுகளுடன் திருவிழா, கலைநிகழ்ச்சிகள் நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்றனர்.

பக்்தர்கள் கூறுகையில், தினந்தோறும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கூடுகிறது. தேர்தல் சமயத்தில் கூட்டம் கூடியது. அப்போது எல்லாம் கொரோனாவை காரணம் காட்டி நிறுத்த வேண்டியது தானே. நாளை நடைபெறும் கொடியேற்ற நிகழ்ச்சிகளை பார்வையிட அனுமதிக்க வேண்டும். தினந்தோறும் சாமி வீதி உலா வர நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா விதிகளை கடைபிடித்து விழாவை நடத்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News