ஆன்மிகம்
சுவாமி சண்முகர், வள்ளி, தெய்வானையுடன் பச்சை சாத்தி கோலத்தில் உள்பிரகாரத்தில் எழுந்தருளியதை படத்தில் காணலாம்.

திருச்செந்தூர் கோவிலில் ஆவணித் திருவிழா: பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர் உலா

Published On 2021-09-04 06:05 GMT   |   Update On 2021-09-04 06:05 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழாவின் 8-ம் நாளான நேற்று சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி உலா வந்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 27-ந் தேதி ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விழா நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. அதன்படி, 10-ம் திருநாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

8-ம் திருநாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமாத்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. காலை 6 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் வெண்பட்டு அணிந்து, வெண்மலர்கள் சூடி வெள்ளை சாத்தி கோலத்தில் சப்பரத்தில் எழுந்தருளி கோவிலுக்குள் உலா வந்து, உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதிக்கு சென்றார்.

அங்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பகல் 12.05 மணிக்கு சுவாமி, அம்பாள்களுக்கு மகா தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து சுவாமி, வள்ளி-தெய்வானையுடன் பச்சை நிற பட்டாடை உடுத்தி, மரிக்கொழுந்து மற்றும் பச்சை நிற மாலை அணிந்து பச்சை சாத்தி கோலத்தில் சப்பரத்தில் எழுந்தருளி கோவில் உள்பிரகாரத்தில் உலா வந்தார்.

பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்து வரும் விழாவின் 10-ம் நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டம் நடைபெறாது. நாளை காலையில் சுவாமி குமரவிடங்க பெருமானும், வள்ளி அம்பாளும் தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளி கோவில் உள்பிரகாரத்தில் உலா வருகின்றனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். ஆவணி திருவிழாவையொட்டி, மாவட்ட ேபாலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் மற்றும் போலீசார் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News