செய்திகள்
மழை

செங்குன்றத்தில் 13 செ.மீ. மழை- புழல் ஏரி வேகமாக நிரம்புகிறது

Published On 2020-10-29 07:03 GMT   |   Update On 2020-10-29 07:03 GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழையால் புழல் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. தொடர்ந்து மழை பெய்தால் விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
செங்குன்றம்:

சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்றிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

செங்குன்றம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, ஆவடி ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது.

செங்குன்றம் சாமியார் மடம், தண்டல் காலனி, விளாங்காடுபாக்கம், கிராண்ட் லைன், சோத்துப்பாக்கம் சன்சிட்டி, பாடியநல்லூர் உள்ளிட்ட இடங்களில் பெய்த பலத்த மழையால், புழல் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.

புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடியாகும். பூண்டியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. வினாடிக்கு 160 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

புழல் ஏரியில் 2,086 மில்லியன் கனஅடி நீர் தற்போது உள்ளது. இந்த நிலையில் மழை நீரும் புழல் ஏரிக்கு வேகமாக சென்று கொண்டு இருக்கிறது. வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் செல்கிறது.

இதனால் புழல் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. தொடர்ந்து மழை பெய்தால் விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாடியநல்லூர் பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள 18 வார்டுகளில் குடியிருப்புகளிலும் உள்ள சாலைகளில் மழை நீர் தேங்கி இருக்கிறது. அதனை அகற்றும் பணியில் பேரூராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பொன்னேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

பொன்னேரி மீஞ்சூர் பழவேற்காடு தச்சூர் திருப்பாலைவனம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு தொடங்கிய மழை விட்டு விட்டு கனமழையாக பெய்து வருகிறது மேலும் காற்றும் வீசி வருவதால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது.

பொன்னேரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் வேலை முடியாததால் மழைநீர் வெளியே செல்ல முடியாமல் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

செங்குன்றம்- 13 செ.மீ.

கும்மிடிப்பூண்டி- 46 மி.மீ.

திருவாலங்காடு - 12 மி.மீ.

பூந்தமல்லி- 27 மி.மீ.

செம்பரம்பாக்கம் - 14 மி.மீ.

ஜமீன் கொரட்டூர்- 7 மி.மீ.

திருவள்ளூர்- 6 மி.மீ.

பொன்னேரி- 35 மி.மீ.

ஊத்துக்கோட்டை- 28 மி.மீ.

சோழவரம்- 55 மி.மீ.

பூண்டி - 49 மி.மீ.

தாமரைப்பாக்கம்- 36 மி.மீ.
Tags:    

Similar News