செய்திகள்
மந்திரி சுதாகர்

கர்நாடகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்?: மந்திரி சுதாகர் பரபரப்பு பேட்டி

Published On 2021-04-13 01:55 GMT   |   Update On 2021-04-13 01:55 GMT
ஒவ்வொருவரின் பொருளாதார நிலையும் மோசமான நிலைக்கு செல்லக்கூடாது என்றால் கொரோனா தடுப்பு வழிகாட்டுதலை அனைவரும் தீவிரமாக பின்பற்ற வேண்டும்.
பெங்களூரு :

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை தீவிரமாக உள்ளது. அதனால் பெங்களூரு உள்பட 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளோம். கொரோனாவை தடுக்க அரசு வெளியிட்டுள்ள விதிமுறைகளை பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். முழு ஊரடங்கை மீண்டும் அமல்படுத்துவது குறித்து அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை.

ஒவ்வொருவரின் பொருளாதார நிலையும் மோசமான நிலைக்கு செல்லக்கூடாது என்றால் கொரோனா தடுப்பு வழிகாட்டுதலை அனைவரும் தீவிரமாக பின்பற்ற வேண்டும். ஊரடங்கை அமல்படுத்துகிறோம் என்று நானோ அல்லது முதல்-மந்திரியோ எங்கும் கூறவில்லை. நமக்கு எதற்கு ஊரடங்கு என்பது குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும்.

நமக்கு நாமே ஊரடங்கை விதித்துக் கொண்டால் யாருக்கும் எந்த பிரச்சினையும் இருக்காது. கொரோனா 2-வது அலை அபாயகரமான முறையில் பரவி வருகிறது. எங்களின் எதிர் பார்ப்பையும் மீறி பாதிப்பு அதிகமாக இருக்கிறது. பண்டிகை வருகிறது. அதனால் பொதுமக்கள் யுகாதி பண்டிகையை வீடுகளுக்குள் மட்டும் கொண்டாட வேண்டும். வெளியில் அதிகமாக நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.

முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளியே பின்பற்றாமல் இருந்தால் அரசு என்ன செய்யும்?. இப்போதும் நான் பொதுமக்களை பார்த்து கைகூப்பி கேட்டுக்கொள்வது என்னவென்றால், தயவு செய்து ஒரு இடத்தில் கும்பலாக சேர வேண்டாம். தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். முழு ஊரடங்கு வேண்டாம் என்றால் கொரோனா தடுப்பு விதிமுறைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும்.

வார இறுதி நாட்களில் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து நாங்கள் ஆலோசிக்கவில்லை. மராட்டிய நிலை கர்நாடகத்திற்கு வரக்கூடாது என்றால் விதிமுறைகளை பின்பற்றுங்கள். அனைத்தும் மக்களின் கைகளில் தான் உள்ளது. இந்த முறை யுகாதி பண்டிகையை கசப்பு (வேப்பிலை) -கொரோனா, வெல்லம்-தடுப்பூசி என்ற அர்த்தத்தில் கொண்டாட வேண்டும்.

பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைகள் ஒரு வாரத்திற்குள் 50 சதவீத படுக்கைகளை அரசுக்கு ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளன. கடந்த முறையும் பாதி படுக்கைகளை கொடுத்தனர். இப்போதும் அவர்கள் ஒப்புக்கொண்டது நல்ல விஷயம். அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் "ரெம்டிசிவர்" மருந்து இருப்பு உள்ளது.

ஆக்சிஜன், ரெம்டிசிவர் மருந்து பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளப்படும். இதற்கு தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கொரோனா நோயாளிகளுக்காக தற்காலிக மருத்துவமனைகள் தொடங்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நிபுணர் குழு இன்று (நேற்று) அரசுக்கு அறிக்கை வழங்கும். முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூரு திரும்பியதும் அந்த அறிக்கையில் உள்ள அம்சங்கள் குறித்து ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் கடந்த ஒரு ஆண்டாக கஷ்டப்பட்டு வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்டுள்ளனர். மீண்டும் அவர்களுக்கு கஷ்டத்தை கொடுக்க தனிப்பட்ட முறையில் நான் விரும்பவில்லை. ஊரடங்கு வேண்டவே வேண்டாம் என்றால் விதிமுறைகளை பின்பற்றுங்கள். அனைவரும் தங்களுக்குரிய பொறுப்புகளை அறிந்து செயல்பட்டால் ஊரடங்கு குறித்த கேள்வியே எழாது. எத்தனை ஆண்டுகள் இவ்வாறு ஊரடங்கை அமல்படுத்திக் கொண்டு செல்ல முடியும்.

இவ்வாறு சுதாகர் கூறினார்.
Tags:    

Similar News