செய்திகள்
மழை

திருப்பத்தூர் பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை

Published On 2021-06-07 11:34 GMT   |   Update On 2021-06-07 11:34 GMT
திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி ஆம்பூர், மாதனூர், நாட்டறம்பள்ளி, சர்க்கரை ஆலை உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் மழை கொட்டி தீர்த்தது.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் திருப்பத்தூரில் நேற்று முன்தினம் மாலை 3 மணிமுதல் லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் படிப்படியாக அதிகரித்து இரவு 10 மணிக்கு பலத்த மழை பெய்தது. திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி ஆம்பூர், மாதனூர், நாட்டறம்பள்ளி, சர்க்கரை ஆலை உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் மழை கொட்டி தீர்த்தது.

இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மேலும் திருப்பத்தூர், புதுப்பேட்டை, ஆலங்காயம், கந்திலி, ஏலகிரி மலை, ஜவ்வாது மலை, உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. திருப்பத்தூர் கலைஞர் நகர், அண்ணா நகர், டி.எம்.சி. காலனி பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்தது.

சில வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் விடிய விடிய தூங்காமல் விழித்திருந்தனர். இதனால் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.

மேலும் திருப்பத்தூரில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட கச்சேரிதெரு, செட்டித்தெரு, சிவராவ்தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் மழைநீர் தேங்கி நின்றது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

ஆம்பூர் சர்க்கரை ஆலை பகுதி- 16, ஆலங்காயம்- 11, திருப்பத்தூர்- 10.50, வாணியம்பாடி- 9, ஆம்பூர்- 8, திருப்பத்தூர் சக்கரை ஆலை பகுதி- 4.50. இந்த மழை காரணமாக தற்போது வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசி வருகிறது. கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News