செய்திகள்
கோப்புபடம்

திருப்பூரில் சாய ஆலை நிர்வாகிகள் சங்க தேர்தல் - இன்று காலை ஓட்டுப்பதிவு தொடங்கியது

Published On 2021-09-27 09:22 GMT   |   Update On 2021-09-27 09:22 GMT
3 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
திருப்பூர்:
 
திருப்பூர் பகுதிகளில் இயங்கும் 460 சாய ஆலைகளை உறுப்பினராக கொண்டு சாய ஆலை உரிமையாளர் சங்கம் இயங்குகிறது. இதில் தலைவர், 2 துணை தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், 2 இணை செயலாளர்களை உள்ளடக்கிய நிர்வாக பதவிகள் உள்ளன.

3 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்தவகையில் சாய ஆலை சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்ய இன்று தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

இதையடுத்து இன்று காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. உறுப்பினர்கள் ஆர்வமாக வாக்களித்தனர். வக்கீல் ராமமூர்த்தி தேர்தல் நடத்தும் அதிகாரியாக செயல்பட்டார்.

இந்த தேர்தலில் தற்போதைய தலைவரான நாகராஜன், துணை தலைவர் சீனிவாசன் ஆகியோர் களமிறங்கவில்லை. ஏற்கனவே பதவி வகித்து வரும் பிரதிநிதிகள் ஓரணியிலும், அவர்களை எதிர்த்து புதிய அணி ஒன்றும் உருவாகியுள்ளது.

பொருளாளர் காந்தி ராஜனை தலைவராக கொண்டுள்ள அணியில் பொதுச்செயலாளர் பதவிக்கு முருகசாமி, பொருளாளர் பதவிக்கு மாதேஸ்வரன், இணை செயலாளர் பதவிக்கு செந்தில், தியாகராஜன், துணை தலைவருக்கு பக்தவத்சலம் போட்டியிட்டு உள்ளனர்.

காசிபாளையம் சுத்திகரிப்பு மைய முன்னாள் தலைவர் நாட்ராயனை தலைவராக கொண்டு உருவாகியுள்ள புதிய அணியில் துணை தலைவர் பதவிக்கு நடராஜ், ஈஸ்வரன், இணை செயலாளர் பதவிக்கு தட்சிணாமூர்த்தி, சுதாகர், செயலாளர் பதவிக்கு மகேஷ், பொருளாளர் பதவிக்கு குணசேகரன் போட்டியிடுகின்றனர்.

மாலை 5 மணிக்கு ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இரவு 7 மணிக்கு புதிய நிர்வாகிகள் பதவியேற்புடன் சாய ஆலை சங்க மகாசபை கூட்டம் நடைபெற உள்ளது.
Tags:    

Similar News