செய்திகள்
கோப்புபடம்

மாத்தூர் தொட்டிப்பாலத்தில் இருந்து குதித்து மேலும் ஒருவர் இன்று தற்கொலை -போலீசார் விசாரணை

Published On 2021-09-09 14:17 GMT   |   Update On 2021-09-09 14:17 GMT
ஒரு வார காலத்திற்குள் இரண்டவதாக முதியவர் ஒருவர் இன்று தற்கொலை செய்திருப்பது சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவட்டார்:

குமரி மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலங்களில் ஒன்று மாத்தூர் தொட்டிப்பாலம். ஆசியாவிலேயே உயரமான தொட்டிப்பாலம் என்று பெயர் பெற்ற இந்த பாலம் 104 அடி உயரத்தில் இருக்கிறது.

பெரிய பெரிய தூண்களுடன் இந்த பாலம் பார்ப்பதற்கே மிகவும் பிரம்மாண்டமாக காணப்படும். மாத்தூர் தொட்டிப்பாலத்தை பார்வையிட தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்த இந்த பாலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் திறக்கப்பட்டது.

இதையடுத்து தற்போது தினமும் அதிகமான சுற்றுலா பயணிகள் வர தொடங்கி இருக்கின்றனர். இதனால் மாத்தூர் தொட்டிப்பாலம் சுற்றுலா பயணிகள் வருகையால் மீண்டும் களைகட்ட தொடங்கியிருக்கிறது.

இந்த நிலையில் குலசேகரம் கான்வென்ட் பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் சந்திர போஸ் (வயது38) என்பவர் கடந்த 3-ந்தேதி இந்த பாலத்தின் மேல் பகுதியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்தார். இவர் சாமியார்மடத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் ஊழியராக பணிபுரிந்து வந்த அவர் நகைகளை அடகுவைத்து கடன் வாங்கியிருக்கிறார்.

அந்த கடனை திரும்பி கொடுக்க முடியாத வேதனையில் பாலத்தில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆஸ்பத்திரி ஊழியர் தற்கொலை சம்பவத்தை தொடர்ந்து மாத்தூர் தொட்டிப்பாலம் பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பால பகுதியில் யாரேனும் சந்தேகப்படும் வகையில் திரிகிறார்களா? என்று கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் மேலும் ஒரு நபர் இன்றுகாலை மாத்தூர் தொட்டிப்பாலத்தின் மேலே இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவரான அவர், காலை 10.30 மணியளவில் தொட்டிப்பாலத்தின் மேலே நடந்து சென்றிருக்கிறார்.

பாலம் முடிவு பகுதியில் 5-வது தூண் இருக்கக்கூடிய பகுதியில் பாலத்தின் மேலே இருந்து கீழே பாறை உள்ள பகுதியில் குதித்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவஇடத்திலேயே உடல் சிதறி பலியானார். பாலத்தில் இருந்து அவர் குதித்ததை அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளும், பாலத்தின் கீழ் பகுதியில் கடை நடத்திவரும் பொதுமக்களும் பார்த்துள்ளனர்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் மற்றும் போலீசார் வந்தனர். அவர்கள் பிணமாக கிடந்த அந்த முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்தார்? என்பது தெரியவில்லை. அவர் காவி நிற வேட்டி மற்றும் பூணூல் அணிந்திருக்கிறார். அவர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட முதியவரின் சட்டைப்பையில் ரூ30, ரூ10 மற்றும் ரூ9 என 3 அரசு பஸ் டிக்கெட்டுகளும், மாத்தூர் தொட்டிப்பாலத்தை பார்ப்பதற்கான 5 ரூபாய் டிக்கெட்டும் இருந்தன. இதனால் அவர் வெளியூரை சேர்ந்தவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதன் அடிப்படையில் தற்கொலை செய்த முதியவரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 3-ந்தேதி ஆஸ்பத்திரி ஊழியர் பாலத்தில் இருந்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், ஒரு வார காலத்திற்குள் இரண்டவதாக முதியவர் ஒருவர் இன்று தற்கொலை செய்திருப்பது சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

Similar News