செய்திகள்
மு.க.ஸ்டாலின்- வைகோ

முன்னாள் எம்.பி. டாக்டர் கலாநிதி மரணம்: மு.க.ஸ்டாலின்- வைகோ இரங்கல்

Published On 2020-09-19 01:23 GMT   |   Update On 2020-09-19 01:23 GMT
தி.மு.க. முன்னாள் எம்.பி. டாக்டர் கலாநிதி மாரடைப்பால் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார்.
சென்னை:

தி.மு.க. சார்பில் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு 2 முறை வெற்றி பெற்றவர் டாக்டர் கலாநிதி. சிறந்த நாடாளுமன்ற பேச்சாளராக விளங்கினார். வயது முதிர்வு காரணமாக அரசியல் மற்றும் மருத்துவ பணிகளில் இருந்து விலகி வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார்.

இந்த நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் காலமானார். மத்திய சென்னை தொகுதியில் இருந்து, 1980 மற்றும் 1984-ம் ஆண்டுகளில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவரின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் எம்.பி. டாக்டர் அ.கலாநிதி திடீரென்று மறைவு எய்தினார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனைப்பட்டேன். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தி.மு.க.வில் இருந்த போது மத்தியசென்னை நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து 1980 மற்றும் 1984-ம் ஆண்டுகளில் இருமுறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் மக்களுக்காக அர்ப்பணிப்புணர்வுடன் பணியாற்றியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், மருத்துவர்களுக்கும் எனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், ‘டாக்டர் கலாநிதி இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன். என் மீது எல்லையற்ற அன்பு கொண்டு இருந்தார்.

அண்மையில் அவரது துணைவியார் மறைந்த அதிர்ச்சி அவரைப் பாதித்து விட்டது. டாக்டர் கலாநிதி மறைவு ஏழை, எளிய மக்களுக்கும், மருத்துவத் துறைக்கும் இழப்பு ஆகும். அவருடைய குடும்பத்தார், உற்றார், உறவினர்களுக்கு ம.தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்து உள்ளார்.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் எம்.பி.யும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
Tags:    

Similar News