செய்திகள்
கிருஷ்ணா தண்ணீர்

பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் குறைந்தது

Published On 2020-02-25 09:33 GMT   |   Update On 2020-02-25 09:33 GMT
ஆந்திர விவசாயிகள் பூண்டி ஏரிக்கு வரும் கிருஷ்ணா தண்ணீரை எடுத்து வருவதால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.
ஊத்துக்கோட்டை:

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டப்படி கடந்த செப்டம்பர் 28-ந் தேதி முதல் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

கண்டலேறு அணையில் இருந்து தற்போது 1700 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. கண்டலேறு அணையில் 68 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி 34 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

கண்டலேறு அணையிலிருந்து திறந்துவிடப்படும் கிருஷ்ணா தண்ணீரை ஆந்திர விவசாயிகள் பயன்படுத்துவது உண்டு. அக்டோபர் மாதத்தில் நடவு செய்த பயிரை ஜனவரி முதல் வாரத்தில் அவர்கள் அறுவடை செய்து விட்டனர்.

கண்டலேறு அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதை கருத்தில்கொண்டு ஆந்திரா விவசாயிகள் தற்போது மீண்டும் நெல் நடவு செய்து உள்ளனர்.

இதையடுத்து விவசாயிகள் பூண்டி ஏரிக்கு வரும் கிருஷ்ணா தண்ணீரை எடுத்து வருகின்றனர். இதன் காரணமாக பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.

பூண்டி ஏரிக்கு சராசரியாக 400 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஆந்திர விவசாயிகள் தண்ணீரை எடுத்து வருவதால் தற்போது இது 314 கனஅடியாக குறைந்துள்ளது.

பூண்டி ஏரியின் மொத்த கொள்ளவு 3231 மில்லியன் கனஅடி. ஏரியில் 1657 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு 453 கனஅடி தண்ணீரும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு 10 கனஅடி தண்ணீரும் அனுப்பப்படுகிறது.

Tags:    

Similar News