செய்திகள்
கோப்புபடம்

மழையால் நெற்பயிர்கள் சேதம், அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் - உடுமலை விவசாயிகள் வலியுறுத்தல்

Published On 2021-11-26 07:54 GMT   |   Update On 2021-11-26 07:54 GMT
கடந்த ஜூலை மாதம் அமராவதி அணையின் நீராதாரங்களில் மழை தீவிரமடைந்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டு அதன் முழு கொள்ளளவை நெருங்கியது.
உடுமலை;

உடுமலை அடுத்த அமராவதி அணையை ஆதாரமாகக் கொண்டு சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. தென்னை, வாழை, கரும்பு காய்கறிகள் உள்ளிட்டவை பரவலாக சாகுபடி செய்யப்பட்டாலும் நெல் சாகுபடியே பிரதானமாக உள்ளது. 

மழைக்காலங்களில் அணைக்கு ஏற்படுகின்ற நீர்வரத்தை கொண்டு கல்லாபுரம் - ராமகுளம் வாய்க்கால், அமராவதி ஆறு, பிரதான கால்வாய் மூலமாக பாசன நிலங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. 

அதைக்கொண்டு நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். மழை பெய்து அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டதை தொடர்ந்து விவசாயிகள் நெல் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். 

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால் அறுவடைக்கு தயாராகி வருகின்ற நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

கடந்த ஜூலை மாதம் அமராவதி அணையின் நீராதாரங்களில் மழை தீவிரமடைந்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டு அதன் முழு கொள்ளளவை நெருங்கியது. இதையடுத்து நெல் சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதைத்தொடர்ந்து சாகுபடி பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தோம். 

அவ்வப்போது பெய்த மழையால் நெற்பயிர்கள் நல்ல முறையில் வளர்ந்து வந்தது. இதனால் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் குலை மற்றும் பழநோய் தாக்குதல் நெற்பயிர்களைத் தாக்கி வந்தது. அத்துடன் காட்டுப்பன்றிகளும் வயல்களுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வந்தது.

இதுபோன்ற காரணங்களால் ஒரு ஏக்கரில் பாதி அளவு சேதம் ஏற்படக்கூடிய சூழல் உருவாகி உள்ளது. அதில் இருந்து மீட்டு பயிர்களை அறுவடை நிலைக்கு கொண்டு வந்தோம். ஆனால் தற்போது பெய்த பலத்த மழையால் நெல் மணிகளின் எடையை தாங்க முடியாமல் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து விட்டது. 

கடந்த ஆண்டும் இதே போன்ற ஒரு சூழல் நிலவியதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆட்கள் பற்றாக்குறையால் தாமதமாக தொடங்கிய நெல் சாகுபடியில் ஏற்பட்ட பல்வேறு இடர்பாடுகளால் ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் வரையிலும் முதலீடாக செய்யப்பட்ட தொகையை திரும்பப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. 

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அமராவதி, கல்லாபுரம் பகுதியில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குவதற்கும் முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News