பைக்
டிவிஎஸ் அப்பாச்சி

உலக நாடுகளில் அதிகரிக்கும் டிமேண்ட்... ஏற்றுமதியில் சாதனை படைத்த தமிழகத்தை சேர்ந்த இருசக்கர வாகன நிறுவனம்

Published On 2022-02-24 10:35 GMT   |   Update On 2022-02-24 10:35 GMT
தற்போது 80-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் வர்த்தக பணிகளை மேற்கொண்டு வரும் அந்நிறுவனம் மேலும் சில நாடுகளிலும் கால் தடம் பதிக்க திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் நிறுவனம் 80-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் வர்த்தக பணிகளை மேற்கொண்டு வருகின்றது. ஆப்பிரிக்கா, தெற்காசிய நாடுகள்,  மத்திய மற்றும் லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் டிவிஎஸ் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 2021-22 நிதியாண்டில் மட்டும் 10 லட்சம் இருசக்கர வாகனங்களை டிவிஎஸ் நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

இதன்மூலம் நாட்டின் 2-வது அதிக இருசக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்த நிறுவனம் என்ற சாதனையை டிவிஎஸ் பெற்றுள்ளது. அந்நிறுவனத்தின் அப்பாச்சி பைக்குகளே அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இதுதவிர வெளிநாடுகளுக்கு என உருவாக்கப்பட்டு வரும் எச்எல்எக்ஸ் எனும் மாடலும், டிவிஎஸ் ரைடர் மற்றும் டிவிஎஸ் நியோ ஆகிய பைக்குகளும் சிறப்பான எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.



மேலும் டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புகழ்பெற்ற மாடல்களான ஜி310ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் ஆகிய மாடல்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்து விற்பனைக்கு வழங்கி வருகின்றது. 

இதை தொடர்ந்து இந்த  வாகன தயாரிப்பு நடவடிக்கையை மேலும் விரிவாக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த இரு நிறுவனங்களும் இணைந்து எலெக்ட்ரிக் வாகனங்களை அதிக அளவில் அறிமுகம் செய்யவுள்ளதாக கூறியுள்ளன

இதன்பின் டிவிஎஸ் நிறுவனம் புதிய தொழில்நுட்ப சலுகைகளுடன் மேலும் சில நாடுகளிலும் கால் தடம் பதிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
Tags:    

Similar News