உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

சாலை பணிகள் குறைகளை தெரிவிக்க தொலைபேசி எண் பேராசிரியர் ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2022-01-27 04:03 GMT   |   Update On 2022-01-27 04:03 GMT
சாலை பணிகளின் குறைகளை தெரிவிக்க தொலைபேசி எண்ணையும் அறிவிக்க வேண்டும் என்று பேராசிரியர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி:

புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை அரசு தனக்கு வரி செலுத்தும் மக்களுக்கு சீரான தரமான சாலையை அமைத்துக்கொடுக்க வேண்டியது தனது அடிப்படை அவசியமான பணி என்பதை உணர வேண்டும் இதனை செய்வதற்கு பழைய தவறான முறைகளை கைவிட்டு புதிய அணுகுமுறைகளை கையாள வேண்டும். 

ஒரு சாலை தரமானதாக இருக்க வேண்டுமெனில் அது குறைந்த பட்சம் 5 ஆண்டுகளுக்கு தாங்க வேண்டும். எந்த சேதமும் பழுதும் ஆகாமல் இருக்க வேண்டும் அப்படி ஏற்பட்டால் அதை ஒப்பந்ததாரர்கள் தனது சொந்த செலவில் செய்து தர வேண்டும். 

புதிய சாலைகள் அமைப்பதற்கு முன்பு பழைய சாலையை   முழுவதுமாக சுரண்டி எடுத்து சாலையின் மட்டம் உயராத வகையில் அமைக்க வேண்டும். 

இதனால் புதிய சாலை இயற்கையாக அமைந்து நீண்ட காலத்திற்கு நீடிக்கும் மழைக்காலங்களில் சாலைகளில் தேங்கும் மழைநீர் வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் எளிதாக சென்று பாதிப்பை ஏற்படுத்தாது. ஒப்பந்ததாரர் யாருக்கும் எதற்காகவும் கமிஷன் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது.

சாலை போடும் இடங்களில் உள்ள மக்கள் குழுக்கள் சமூக ஆர்வலர்கள் இந்த பணியை மேற்பார்வையிட்டு ஆய்வு செய்து தவறுகள் இருந்தால்  அவற்றை சுட்டிக்காட்ட வேண்டும். மக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க அரசு ஒரு உதவி தொலைபேசி எண்ணையும் அறிவிக்க வேண்டும். 

மாநிலம் முழுவதும் நடைபெறும்  சாலை பணிகளை கண்காணித்து அதன் தரத்தை உறுதி செய்ய  தொழில்நுட்ப பல்கலைக்கழகம், காரைக்கால் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் உள்ள பேராசிரியர் கொண்ட குழு அமைக்க வேண்டும். அந்த குழு ஆய்வு செய்து தவறுகளை கண்டுபிடிக்க வேண்டும். 

பொதுப்பணித்துறை செயலாளர் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று விதிகளின்படி வேலை நடக்கிறதா? என்பதை உறுதி செய்யவேண்டும்.

இவ்வாறு பேராசிரியர் ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News