ஆன்மிகம்
சீதளாதேவி மாரியம்மன்

அம்மை நோய், கண்ணில் குறைபாடு உள்ளவர்களை காக்கும் சீதளாதேவி மாரியம்மன்

Published On 2020-08-17 05:53 GMT   |   Update On 2020-08-17 05:53 GMT
அம்மை நோய் கண்டவர்கள், கண் நோய் மற்றும் கண்ணில் குறைபாடு உள்ளவர்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்து ஏழு நாட்கள் கோவிலில் தங்கி இருந்தால் கண்பார்வையில் கண்டிப்பாக முன்னேற்றம் காணப்படும் என்கிறார்கள்.
கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் வழியில் உள்ளது ‘வலங்கைமான்’ என்ற ஊர். இந்த ஊரின் சாலை ஓரத்திலேயே அமைந்துள்ளது, சீதளாதேவி மகா மாரியம்மன் கோவில்.

நான்கு திருக்கரங்களுடன் இடது காலை மடித்து, வலது காலை தொங்கவிட்டபடி வீர சிம்மாசனத்தில் அமர்ந்த நிலையில் கிழக்கு நோக்கி மகா மாரியம்மன் வீற்றிருக்கிறாள்.

‘அபிராமி அந்தாதி’ பாராயணம் செய்து வெள்ளிக்கிழமைகளில் குங்கும அர்ச்சனை செய்துவழிபட்டால் சுபகாரியத்தடைகள் அகலும். உடலில் எந்தப் பகுதியில் நோய் தாக்கம் இருப்பினும், அம்மனை வேண்டிக்கொண்டு அங்கப்பிரதட்சணம் வருவது இந்தத் தலத்தில் தினமும் நிகழும் நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கிறது. அம்மை நோய் கண்டவர்கள் இங்கு வந்து மூன்று நாட்கள் தங்கியிருந்து மாரியம்மனின் அபிஷேக பாலையும், வேப்பிலையையும் உண்டு வந்தால் அம்மை நோய் தாக்கம் குறைந்து உடனே குணமாகிவிடும்.

கண் நோய் மற்றும் கண்ணில் குறைபாடு உள்ளவர்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்து ஏழு நாட்கள் கோவிலில் தங்கி இருந்து அம்மனின் அபிஷேகப் பாலையும், வேப்பிலையையும் உண்டு வந்தால் கண்பார்வையில் கண்டிப்பாக முன்னேற்றம் காணப்படும் என்கிறார்கள். கண் நோய் குணமானவர்கள் வெள்ளியில் கண்மலர் வாங்கி அம்மனுக்கு சமர்ப்பிக்கலாம். கால் நோய் மற்றும் வாத நோய்களுக்கு கோவிலில் தரும் எலுமிச்சை சாறு, வேப்பிலை, குங்குமம் மூன்றையும் குழைத்து தடவி வந்தால் நோய் விரைவில் குணமடையும்.

உயிருக்கு போராடுபவர்கள், மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்கள், தீராத நோய்களால் உயிர் பயத்தில் அவதியுறுபவர்கள் இத்தலம் வந்து அம்மனை வேண்டிக் கொள்ள வேண்டும். அல்லது நோயாளிகளின் உறவினர்கள் இங்குவந்து அம்மனிடம் உயிர் காக்க வேண்டி, அம்பாளிடம் ‘பாடை காவடி நேர்ச்சை’ செலுத்துவதாக வேண்டிக் கொண்டால், அம்மன் நிச்சயம் உயிரை காத்துக் கொடுப்பாள் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த நேர்த்திக்கடனை ஆலயத்தில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பெருவிழாவின் போது செலுத்த வேண்டும்.

கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் வழியில் 9 கிலோமீட்டர் தொலைவில் சீதளாதேவி மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
Tags:    

Similar News