செய்திகள்
ஜெயலலிதா படத்திற்கு மரியாதை செலுத்திய சசிகலா- டிடிவி தினகரன்

சட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம்- சசிகலா

Published On 2021-02-24 05:25 GMT   |   Update On 2021-02-24 07:28 GMT
ஜெயலலிதாவின் உண்மையான உடன் பிறப்புகள் அனைவரும் ஒன்றாக இணைந்து தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திப்போம் என சசிகலா கூறியுள்ளார்.
சென்னை:

சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து சசிகலா கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து விடுதலை ஆனார்.

பின்னர் சில நாட்கள் கொரோனாவுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கடந்த 9-ந்தேதி அவர் பெங்களூரில் இருந்து காரில் சென்னை திரும்பினார்.

அதன்பிறகு சசிகலா தி.நகரில் உள்ள இல்லத்தில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளையொட்டி தி.நகரில் உள்ள இல்லத்தில் இன்று அவர் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்களுக்கு சசிகலா இனிப்புகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

என்னுடைய அக்கா புரட்சி தலைவியின் 73-வது பிறந்த நாளையொட்டி இங்கு வந்துள்ள கழக உடன்பிறப்புகள், பொது மக்களுக்கு எனது அன்பான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெயலலிதாவின் உண்மையான உடன் பிறப்புகள் அனைவரும் ஒன்றாக இணைந்து தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திப்போம். விரைவில் தொண்டர்கள், பொதுமக்களையும் சந்திக்க உள்ளேன்.

ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களுக்கு நான் துணை நிற்பேன். தொண்டர்கள் ஒன்றாக இணைந்து மீண்டும் ஆட்சி தொடர வேண்டும் என்பதே என் விருப்பம்.

இவ்வாறு சசிகலா பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பெங்களூரில் இருந்து சென்னை திரும்பியபோதும், சட்டபேரவை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம் என்று சசிகலா கூறியிருந்தார். தற்போது 2-வது முறையாக அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News