வழிபாடு
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா

Published On 2022-04-15 03:57 GMT   |   Update On 2022-04-15 03:57 GMT
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
திருஞானசம்மந்தரால் பாடல் பெற்ற இக்கோவில் நவக்கிரகங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது. ஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் இந்த கோவிலில் குருப்பெயர்ச்சி விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு குருபகவான் கும்ப ராசியில் இருந்து மீனராசிக்கு நேற்று அதிகாலை 4.16 மணிக்கு பெயர்ச்சியடைந்தார். இதனை முன்னிட்டு இந்த கோவிலில் குருப்பெயர்ச்சி விழா வெகு சிறப்பாக நடந்தது. குருபகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
குருபகவான் தங்ககவசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மூலவர் குருபகவான் சன்னதிக்கு எதிரில் தங்ககவச அலங்காரத்தில் உற்சவர் தெட்சிணாமூர்த்தி எழுந்தருளினார்.

கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், சனீஸ்வர பகவான் சன்னதிகளில் சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் வந்து குவிந்தனர். அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று குருபகவானை தரிசனம் செய்தனர்.

நன்னிலம் தொகுதி எம்.எல்.ஏ. ஆர்.காமராஜ், தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி, திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மற்றும் பல்வேறு துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

பக்தர்களின் நலன் கருதி திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவின்பேரில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் சிறப்பு வசதிகளை செய்யப்பட்டு இருந்தது. அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியிலும், பாதுகாப்பு பணியிலும் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் மற்றும் அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹரிஹரன், கோவில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். குருப்பெயர்ச்சியையொட்டி 2-வது கட்ட லட்சார்ச்சனை வருகிற 18-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரை நடைபெறுகிறது.
Tags:    

Similar News