செய்திகள்
மது வாங்க வந்தவரிடம் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் உள்ளதா? என்று விசாரிக்கப்பட்ட காட்சி

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மது விற்பனை- கலெக்டர் உத்தரவு

Published On 2021-09-03 04:51 GMT   |   Update On 2021-09-03 07:15 GMT
கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மது விற்பனை செய்யப்படவில்லை. அவர்களது விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்ய வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

இது தொடர்பாக நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் 97 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவடைந்து உள்ளது. மீதமுள்ள 3 சதவீதம் பேரில்
கொரோனா
பாதித்தவர்கள் இருந்தால், அவர்களுக்கு 3 மாதத்திற்கு பிறகு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மது குடிப்பவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது இல்லை என்ற தகவல் வருகிறது. எனவே முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் மது விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிய எளிதாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.



கலெக்டர் உத்தரவின்படி நேற்று முதல் நீலகிரியில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மது வாங்க வரும் நபர்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளதற்கான சான்றிதழ் அல்லது செல்போனில் பதிவிறக்கம் செய்த சான்றிதழை விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள் சரிபார்த்தனர். சான்றிதழை காட்டியவர்களுக்கு மட்டும் மது விற்பனை செய்யப்பட்டது.

கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மது விற்பனை செய்யப்படவில்லை. அவர்களது பெயர், செல்போன் எண், முகவரி, ஆதார் எண் போன்ற விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் மூலம் வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சேகர் கூறும்போது, நீலகிரியில் மொத்தம் 76 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இங்கு பணிபுரியும் 590 பணியாளர்கள் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இன்று(நேற்று) முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முதல் டோஸ் செலுத்தினால் போதுமானது என்றார்.


Tags:    

Similar News