செய்திகள்
தரகர் ஜெயக்குமார்

விடைத்தாள்களை திருத்தம் செய்ய ஜெயக்குமாருக்கு உதவி செய்த 3 டிரைவர்கள் சிக்கினர்

Published On 2020-02-11 08:22 GMT   |   Update On 2020-02-11 08:22 GMT
டிஎன்பிஎஸ்சி தேர்வில் விடைத்தாள்களை திருத்தம் செய்ய தரகர் ஜெயக்குமாருக்கு உதவி செய்த 3 டிரைவர்கள் சிக்கி உள்ளனர். தேர்வு முறைகேட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை:

குரூப்-4 மற்றும் குரூப்-2ஏ மோசடியில் மூளையாக செயல்பட்ட முகப்பேரை சேர்ந்த தரகர் ஜெயக்குமார், ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து விடைத்தாள்களை வேனில் எடுத்து வந்தபோது நடுவழியில் நிறுத்தி தனது காரில் மாற்றி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் பிறகே விடைத்தாள்கள் திருத்தப்பட்டு மீண்டும் டி.என்.பி.எஸ்.சி. வேனில் ஏற்றப்பட்டுள்ளது.



டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் ஓம்காந்தன், ஜெயக்குமார் இருவரும் சேர்ந்து கூட்டாக இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு சென்னையைச் சேர்ந்த 3 டிரைவர்கள் உதவி செய்துள்ளனர். சி.பி.சி.ஐ.டி. போலீசார் விரித்த வலையில் இவர்களும் சிக்கியுள்ளனர்.

சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்த டிரைவர்கள் கார்த்திக், செந்தில்குமார், பெரம்பூர் ஜி.கே.எம். காலனியைச் சேர்ந்த இன்னொரு டிரைவரான சர்புதீன் ஆகிய 3 பேரும் விடைத்தாள்களை முறைகேடாக திருத்தியபோது வழித்துணையாக சென்றுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் இருந்து சென்னைக்கு எடுத்து வரப்பட்ட விடைத்தாள்களை முக்கிய குற்றவாளியான ஜெயக்குமார் காரில் எடுத்துச் சென்றபோது, அவரது காருக்கு முன்னால் டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் ஓம்காந்தனின் காரில் சென்ற 3 டிரைவர்களும் சாலையில் போலீஸ் சோதனை எதுவும் நடைபெறுகிறதா? என்று கண்காணித்து அவ்வப்போது போனில் தகவல் கூறியுள்ளனர்.

இதற்காக ஓம்காந்தனிடம் 3 பேரும் பணம் வாங்கியுள்ளனர்.

இதையடுத்து தேர்வு முறைகேட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஓம்காந்தனின் கார் மற்றும் டிரைவர் கார்த்திக்கின் கார் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த கார்களையும் தேர்வு முறைகேட்டில் முக்கிய ஆதாரங்களாக போலீசார் காட்டியுள்ளனர்.

குரூப்-2ஏ தேர்வு மோசடியில் ஈடுபட்டு அரசு துறைகளில் பணியில் சேர்ந்தவர்களிடம் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரையில் பணிகள் ஏலம் விடப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.
 
Tags:    

Similar News