செய்திகள்
கோழிக்கோடு சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து செல்வதை காணலாம்

கேரளாவில் 5 நாட்களுக்கு மிக பலத்த மழைக்கு வாய்ப்பு

Published On 2021-10-13 08:54 GMT   |   Update On 2021-10-13 12:28 GMT
கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வெள்ளத்தில் சிக்கியும், சுவர் இடிந்து விழுந்தும் இதுவரை குழந்தைகள் உள்பட 4 பேர் பலியாகி உள்ளனர்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையும் சூறாவளி சுழற்சியும் உருவாகி உள்ளதாக திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதன் காரணமாக கேரளாவில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக கோழிக்கோடு, பாலக்காடு, மலப்புரம், வயநாடு மாவட்டங்களில் அதிகபட்ச மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

சில மாவட்டங்களில் 20 செ.மீ. அளவுக்கு மழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதனால் அந்த மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே மழை பாதிப்பு அதிகம் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படும் பத்தினம்திட்டா, இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம், கோட்டயம் மாவட்டங்களில் 6 கம்பெனி தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் இங்கு மழை நிவாரண முகாம்களும் அமைக்கப்பட்டு உள்ளன. இன்று காலை வரை 27 முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில் 622 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.



கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வெள்ளத்தில் சிக்கியும், சுவர் இடிந்து விழுந்தும் இதுவரை குழந்தைகள் உள்பட 4 பேர் பலியாகி உள்ளனர். மேலும் இப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் கூடுதல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே சாலக்குடியில் உள்ள ஆதிரபள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அங்கு மழையும் பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நீர் வீழ்ச்சிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இடுக்கி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இங்கு இரவு நேர போக்குவரத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.


இதையும் படியுங்கள்...கழிவறை என தவறாக நினைத்து ஓடும் ரெயிலில் கதவை திறந்த சிறுவன் கீழே விழுந்து பலி
Tags:    

Similar News