செய்திகள்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

சவுதி இளவரசரின் தனி விமானத்தில் அமெரிக்கா சென்ற இம்ரான்கான்

Published On 2019-09-23 18:36 GMT   |   Update On 2019-09-23 18:36 GMT
சவுதி இளவரசர் கேட்டுக்கொண்டதின் பேரில் தனி விமானத்தில் அமெரிக்கா சென்றார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்.
ரியாத்:

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் பிரதமர் இம்ரான்கான் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை கையாண்டு வருகிறார். அந்த வகையில் அவர் வெளிநாட்டு பயணங்களின் போது பிரதமருக்கான தனி விமானத்தில் செல்லாமல் மக்களோடு மக்களாக பயணிகள் விமானத்தில் சென்றுவருகிறார்.

இந்த நிலையில் 2 நாள் சுற்று பயணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சவுதி அரேபியா சென்றார். அவருடன் வெளியுறவு மந்திரி ‌ஷா மெஹ்மூத் குரே‌ஷி, நிதி ஆலோசகர் ஹபிஸ் ‌ஷாயிக் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளும் சென்றனர். அங்கு இம்ரான்கான், அந்நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை நேரில் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அதனை தொடர்ந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறும் ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சவுதி அரேபியாவில் இருந்து அமெரிக்கா புறப்பட இம்ரான்கான் தயாரானார். வழக்கம் போல் அவர் பயணிகள் விமானத்தில் அமெரிக்கா செல்ல ஆயத்தமானார்.

ஆனால் அவரை தடுத்து நிறுத்திய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ‘‘எங்கள் நாட்டு விருந்தாளி பயணிகள் விமானத்தில் செல்வதை என்னால் அனுமதிக்க முடியாது. எனவே நீங்கள் என்னுடைய தனி விமானத்தில் அமெரிக்கா புறப்பட்டு செல்லுங்கள்’’ என இம்ரான்கானிடம் கேட்டுக்கொண்டார்.ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்த இம்ரான்கான் பின்னர் பட்டத்து இளவரசரின் அன்பு கட்டளையை ஏற்றுக்கொண்டார். அதன்படி இம்ரான் மற்றும் அவருடன் வந்திருந்த உயர்மட்ட அதிகாரிகள் அனைவரும் தனி விமானத்தில் அமெரிக்கா சென்றனர்.
Tags:    

Similar News