ஆன்மிகம்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பவித்ரோற்சவ அங்குரார்ப்பணம்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பவித்ரோற்சவ அங்குரார்ப்பணம்

Published On 2021-09-18 08:55 GMT   |   Update On 2021-09-18 08:55 GMT
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் உற்சவர் பத்மாவதி தாயார் கோவில் உள்ளேயே சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஒரு ஆண்டில் பல்வேறு உற்சவங்கள் நடக்கின்றன. அந்த உற்சவங்களில் பங்கேற்கும் அதிகாரிகள், அர்ச்சகர்கள் மற்றும் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தெரிந்தும், தெரியாமலும் செய்த தவறுகளால் ஏற்படுகின்ற தோஷ நிவர்த்திக்காக பவித்ரோற்சவம் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான பவித்ரோற்சவம் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. அதையொட்டி நேற்று மாலை பவித்ரோற்சவ அங்குரார்ப்பணம் நடந்தது. முன்னதாக காலை விஸ்வசேனர் ஆராதனை, புண்ணியாவதனம், ரக்‌ஷாபந்தனம், மிருதசங்கிரஹம், சேனாதிபதி உற்சவம், அங்குரார்ப்பணம் மற்றும் பவித்ராதிவாசம் ஆகியவை நடந்தன.

உற்சவர் பத்மாவதி தாயார் கோவில் உள்ளேயே சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி சதாபார்கவி, கோவில் துணை அதிகாரி கஸ்தூரிபாய், ஆகம ஆலோசகர் சீனிவாசா ஆச்சாரிலு, உதவி அதிகாரி பிரபாகர்ரெட்டி, கோவில் கண்காணிப்பாளர் சேஷகிரி மற்றும் பலர் பங்கேற்றனர்.

வருடாந்திர பவித்ரோற்சவத்தையொட்டி கோவிலில் நடக்கும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News