உள்ளூர் செய்திகள்
சோள பயிரை மேய்ந்த 78 ஆடுகள் உயிரிழப்பு

கமுதி அருகே சோள பயிரை மேய்ந்த 78 ஆடுகள் உயிரிழப்பு

Published On 2022-01-29 06:36 GMT   |   Update On 2022-01-29 06:45 GMT
கமுதி அருகே சோள பயிரை சாப்பிட்ட 78 ஆடுகள் பரிதாபமாக இறந்தன. இந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கமுதி:

ராமநாதபுரம் மாவட் டம் வண்ணாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி, விவசாயி. இவருக்கு மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். திருப்பதி ஏராளமான செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.

தினமும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அந்த பகுதிக்கு அழைத்து சென்று விட்டு மாலையில் தொழுவத்தில் அடைப்பது வழக்கம்.

நேற்று முன்தினம் வழக்கம்போல் ஆடுகளை திருப்பதி மேய்ச்சலுக்கு கொண்டு சென்றார். அந்த ஆடுகள் அங்கு பயிரிட்டு அறுவடை செய்யப்பட்ட சோளப்பயிர்களை சாப்பிட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் ஆடுகள் ஒவ்வொன்றாக திடீரென மயங்கி விழுந்தன. இதனை கண்டு திருப்பதி அதிர்ச்சி அடைந்தார். மயங்கிய ஆடுகள் பரிதாபமாக இறந்தன. மொத்தம் ரூ.8 லட்சம் மதிப்பிலான 78 செம்மறி ஆடுகள் இறந்து விட்டன.

இந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆடுகளை இழந்ததால் வாழ்வாதாரம் இன்றி பரிதவித்து வரும் தனது குடும்பத்தை பாதுகாக்க அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என திருப்பதி கோரிக்கை வைத்துள்ளார்.
Tags:    

Similar News