செய்திகள்
கொரோனா வைரஸ்

நெல்லையில் இன்று 427 பேருக்கு கொரோனா

Published On 2021-04-21 08:45 GMT   |   Update On 2021-04-21 08:45 GMT
திசையன்விளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் 2 ஊழியர்களுக்கும், கல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் ஊழியருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நெல்லை:

நெல்லையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

பெரும்பாலான பகுதிகளில் குடும்பம் குடும்பமாக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மாநகர பகுதியில் குறிப்பிட்ட சில இடங்களில் தொற்று வேகமாக பரவி வருகிறது.

கடந்த சில நாட்களாக பரிசோதனை எண்ணிக்கை மாவட்டத்தில் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதனால் பாதிப்பு எணணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இன்று இதுவரை இல்லாத அளவாக 3 ஆயிரத்து 721 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இன்று ஒரே நாளில் 423 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. 4 பேருக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இதில் திசையன்விளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் 2 ஊழியர்களுக்கும், கல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் ஊழியருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாநகர பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர், கமி‌ஷனர் அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவருக்கும், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டருக்கும், பாளை ஆயுதப்படையில் 2 போலீஸ்காரர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுதவிர வீரவநல்லூரில் ஒரே தெருவில் 4 பேருக்கும், தியாகராஜநகரில் ஒரே வீட்டில் 5 பேருக்கும், காந்தி நகரில் 3 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. மாநகர பகுதியை பொறுத்தவரை மகாராஜநகர், தியாகராஜநகர், ஆயுதப்படை பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தை பொறுத்தவரை கல்லிடைக்குறிச்சி, கூடங்குளம், சேரன் மகாதேவி, வள்ளியூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டது. வடக்கு விஜய நாராயணம் ஐ.என்.எஸ். கட்டபொம்மன் தளத்தில் இன்று 2 ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

கூடங்குளம் அணு உலை ஊழியர்கள் 10 பேருக்கும், தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் 9 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,345 ஆக உயர்ந்தது.

Tags:    

Similar News