செய்திகள்
பட்டாசு வடிவில் தயாரிக்கப்பட்டுள்ள சாக்லேட்டுகளை காணலாம்

என்ஜினீயர் கைவண்ணத்தில் உருவான பட்டாசு வடிவிலான விதவிதமான சாக்லேட்டுகள்

Published On 2021-10-13 06:41 GMT   |   Update On 2021-10-13 07:15 GMT
தீபாவளி சமயம் என்பதால் ராக்கெட், கம்பி மத்தாப்பு, வெடிகுண்டு, சங்கு சக்கரம், லெட்சுமி பட்டாசு, புஸ்வானம் போன்ற பல்வேறு வடிவங்களில் சாக்லேட் தயாரித்து வருவதாக சாப்ட்வேர் என்ஜினீயர் கூறினார்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் ஆர்.வி.நகர் பகுதியைச் சேர்ந்த சிவகுருநாதன் மனைவி புவனசுந்தரி. சாப்ட்வேர் என்ஜினீயரான இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தை கவனித்து வந்த புவனசுந்தரி பொழுதுபோக்கிற்காகவும் தனது குழந்தைகளை மகிழ்விப்பதற்காகவும் வீட்டிலேயே சாக்லேட் தயாரித்து கொடுத்தார்.

பின்னர் அதனை அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கும் உறவினர்களுக்கு வழங்கினார். அதன் சுவை அருமையாக இருக்கவே தனது வீட்டிலேயே தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கினார். மேலும் சாக்லேட்டில் புதுமைகளை புகுத்த நினைத்த புவனசுந்தரி பட்டாசு வடிவில் சாக்லேட்டுகளை தயாரித்தார்.

சிறிது முதல் பெரிய வடிவிலான சாக்லேட்டுகளை தயார் செய்து விற்பனை செய்ய தொடங்கினார். சாக்லேட்டுகளின் தரம் மற்றும் ருசி பலதரப்பட்ட மக்களையும் கவர்ந்து விடவே சமூக வலைதளங்கள் மூலம் வெளியூர்களில் இருந்தும் சிலர் இதனை வாங்கிச் சென்றனர். 1 கிலோ ரூ.450 முதல் ரூ.1800 வரை விற்பனை செய்யப்படுகிறது.



இதுகுறித்து புவனசுந்தரி தெரிவிக்கையில், பொதுவாக சாக்லேட் என்றால் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து இழுக்கும் உணவுப்பொருள். கொடைக்கானலில் ஹோம்மேட் சாக்லேட் தயாரிப்பது போல நாமும் தயாரிக்கலாம் என்று ஆரம்பத்தில் தொடங்கினேன்.

அது அனைத்து தரப்பினரையும் திருப்திபடுத்தியுள்ளதா? என்பதை அறிய இலவசமாகவே பொதுமக்களுக்கு ஆரம்பத்தில் வழங்கினேன். பலரது பாராட்டு மற்றும் வரவேற்புக்கு பிறகு முழு மூச்சாக சாக்லேட் தயாரிப்பில் இறங்கினேன். திண்டுக்கல் நகரின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப சாக்லேட்டுகளை வடிவமைத்தேன். இதனை பத்திரப்படுத்தி வைக்க பிரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியம் கூட கிடையாது. 1 மாதம் வரை கெடாமல் இருக்கும்.



தீபாவளி சமயம் என்பதால் குழந்தைகள் அதிகம் விரும்பி உண்ணும் வகையில் ராக்கெட், கம்பி மத்தாப்பு, வெடிகுண்டு, சங்கு சக்கரம், லெட்சுமி பட்டாசு, புஸ்வானம் போன்ற பல்வேறு வடிவங்களில் தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். வீட்டில் இருக்கும் பெண்கள் தங்களுக்கு தெரிந்த தொழிலில் ஏதேனும் ஒரு புதுமையை நிகழ்த்தினால் யாரும் சாதிக்கலாம் என்றார்.


Tags:    

Similar News