செய்திகள்
விராட் கோலி - பொல்லார்ட்

வெஸ்ட் இண்டீசுக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? நாளை 2-வது ஒருநாள் போட்டி

Published On 2019-12-17 05:40 GMT   |   Update On 2019-12-17 05:40 GMT
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாளை நடக்கிறது.
விசாகப்பட்டினம்:

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

3 ஒருநாள் போட்டி தொடரில் சென்னையில் நடந்த முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாளை (18-ந் தேதி) நடக்கிறது.

முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் ஆர்வத்தில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி உள்ளது.

மேலும் நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியும் உள்ளது. தோல்வி அடைந்தால் ஒருநாள் தொடரை இழந்து விடும்.

இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக கடைசியாக விளையாடிய 9 ஒருநாள் தொடரையும் கைப்பற்றியிருந்தது. தொடர்ச்சியாக 10-வது தொடரை வெல்ல வேண்டுமானால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற கடுமையாக போராட வேண்டும்.

பேட்டிங்கில் பலத்துடன் திகழும் இந்திய அணி பந்து வீச்சில் பலவீனமாக இருக்கிறது. சேப்பாக்கத்தில் 287 ரன் குவித்தும் தோல்வியை தழுவியது பரிதாபமே.

இதனால் விசாகப்பட்டினம் போட்டியில் பந்து வீச்சில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பந்துவீச்சிலும் மாற்றம் செய்யப்படலாம்.

முதல் ஆட்டத்தில் ‘டாப் 3’ பேட்ஸ்மேன்களான ரோகித்சர்மா, லோகேஷ் ராகுல், கேப்டன் விராட் கோலி ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை. இளம் வீரர்களான ரி‌ஷப்பண்ட், ஷிரேயாஸ் அய்யர் பொறுப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

‘டாப் 3’ பேட்ஸ்மேன்கள் இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடினால் மட்டுமே மிகப்பெரிய ஸ்கோரை எட்ட இயலும். இதனால் அவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்துவது அவசியமாகும்.

பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவை மீண்டும் வீழ்த்தி தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது.

அந்த அணி 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு எதிராக தொடரை கைப்பற்றும் வேட்கையில் உள்ளது. கடைசியாக 2006-ம் ஆண்டு தனது நாட்டில் 4-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. அதன்பிறகு தொடர்ச்சியாக 9 தொடர்களை இழந்திருந்தது. இதற்கு நாளை ஆட்டத்தில் முற்றுப்புள்ளி வைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங்கில் ஹெட்மயர், ஹோப், ரோஸ்டன் சேஸ், நிக்கோலஸ் பூரன், கேப்டன் பொல்லார்ட் ஆகியோர் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் ஹோட்ரெல், கீமோ பவுல், அல்ஜாரி ஜோசப் ஆகியோர் முத்திரை பதிக்கக் கூடியவர்கள்.

இரு அணிகளும் வெற்றிபெற கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் மிக விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளும் நாளை மோதுவது 132-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 131 போட்டியில் இந்தியா 62-ல், வெஸ்ட் இண்டீஸ் 63-ல் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் டை ஆனது. 4 போட்டி முடிவில்லை.

நாளைய ஆட்டம் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Tags:    

Similar News