செய்திகள்
மின் வேலியில் சிக்கி யானை பலி

கோவை அருகே மின் வேலியில் சிக்கி ஆண் யானை பலி

Published On 2021-01-05 07:39 GMT   |   Update On 2021-01-05 07:39 GMT
கோவை அருகே ஆண் யானை உயர் மின் அழுத்தம் தாக்கி இறந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வடவள்ளி:

கோவை தென்னம நல்லூரை சேர்ந்தவர் துரை என்ற ஆறுச்சாமி. இவர் செம்மேடு அருகே உள்ள குளத்தேரி பகுதியில் ஒரு தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து அதில் நெற்பயிர்களை பயிரிட்டு இருந்தார்.

தற்போது அந்த நெற்பயிர்கள் கதிர்விட்டு பால்விடும் நிலையில் உள்ளது. நெற் பயிர்களை யானை மற்றும் காட்டு பன்றிகளிடம் இருந்து பாதுகாக்க துரை தனது தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைத்து இருந்தார்.

இந்தநிலையில் நேற்று போளுவாம்பட்டி வன சரகத்துக்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியில் இருந்து 15,22 வயது மதிக்க தக்க 2 ஆண் யானைகள் வெளியேறியது.

இரவு 12 மணியளவில் இந்த யானைகள் துரைக்கு சொந்தமான தோட்டத்துக்குள் நுழைந்தது. பின்னர் தோட்டத்தில் பயிரிடப்பட்டு இருந்த நெற் பயிர்களை தின்றது. தொடர்ந்து 22 வயது மதிக்க தக்க ஆண் யானை தோட்டத்தை விட்டு வெளியேறியது.

அப்போது எதிர்பாராதவிதமாக அந்த யானை தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த மின்வேலியை மிதித்தது. கண்இமைக்கும் நேரத்தில் யானையை மின்சாரம் தாக்கியது. இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அந்த யானை பிளறல் சத்தம் போட்டது. மற்றொரு யானை வேறு வழியாக வெளியே சென்றது. யானையின் பிளறல் சத்தத்தை கேட்ட கிராம மக்கள் வந்து பார்த்தனர்.

அப்போது யானை உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது குறித்து போளுவாம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வனத்துறையினர் விரைந்து வந்து யானையை காப்பாற்ற முயன்றனர். ஆனால் சிறிது நேரத்தில் யானை பரிதாபமாக இறந்தது.

விவசாயிகள் வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க பேட்டரி அல்லது சூரிய ஒளியில் இருந்து எடுக்கப்படும் சாக் அடிக்க கூடிய சிறிய அளவில் பாயும் மின்சாரத்தைதான் பயன்படுத்த வேண்டும். தற்போது ஆண் யானை உயர் மின் அழுத்தம் தாக்கி இறந்துள்ளது. எனவே துரை தனது தோட்டத்தில் உயர் மின் அழுத்தத்தை பயன்படுத்தினாரா? என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மின்வேலியில் சிக்கி இறந்த யானையை அந்த பகுதியில் சேர்ந்த ஏராளமானோர் திரண்டு வந்து பார்த் வண்ணம் உள்ளனர்.

Tags:    

Similar News