ஆன்மிகம்
சுவாமி ஜெயந்திநாதருடன் போர் புரிய சூரபத்மன் நேருக்கு நேராக வந்தபோது எடுத்த படம்.

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது

Published On 2020-11-21 02:33 GMT   |   Update On 2020-11-21 02:33 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் சூரசம்ஹாரம் நடந்தது. விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் எளிமையாக நடைபெற்றது.
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்சீரலைவாய் என்று அழைக்கப்படும் திருச்செந்தூரில் முருக பெருமான் சுப்பிரமணிய சுவாமியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். சூரபத்மனை அழித்து தேவர்களை காத்த இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.

கோவிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த 15-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் யாகசாலை பூஜை நடைபெற்றது. சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் கோவில் உள்பிரகாரத்தில் 108 மகாதேவர் சன்னதி முன்பு எழுந்தருளினார். தொடர்ந்து சுவாமி-அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6-ம் திருநாளான நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. காலையில் உச்சிக்கால அபிஷேகம் நடந்தது. மதியம் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் கோவில் உள்பிரகாரத்தில் 108 மகாதேவர் சன்னதி முன்பு எழுந்தருளினார்.

தொடர்ந்து ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவிலில் இருந்து சூரபத்மன் தனது படைவீரர்களுடன் சன்னதி தெரு வழியாக கோவில் கடற்கரை முகப்பிற்கு வந்தான்.

மாலை 4.35 மணி அளவில் சுவாமி ஜெயந்திநாதர் வண்ண மலர்களாலான மாலைகள் அணிந்து அலங்காரத்துடன் கையில் வேல் ஏந்தி சூரபத்மனை வதம் செய்வதற்காக கடற்கரை முகப்பில் எழுந்தருளினார். முதலில் மாயையே உருவாக கொண்ட யானைமுகனான தாரகாசூரன் தனது பரிவாரங்களுடன் முருக பெருமானிடம் போர் புரிவதற்காக ஆக்ரோஷமாக தலையை ஆட்டியவாறு வந்தான். அவன் முருகபெருமானை 3 முறை சுற்றி வந்து சுவாமிக்கு எதிரே நின்று போரிட தயாரானான். மாலை 4.50 மணி அளவில் தாரகாசூரனை வேல் கொண்டு முருகபெருமான் வதம் செய்தார்.

தொடர்ந்து கன்மமே உருவான சிங்கமுகாசூரனும் முருகபெருமானுடன் போரிடுவதற்காக உக்கிரத்துடன் வந்தான். அவன் முருகபெருமானை 3 முறை வலம் வந்து நேருக்கு நேர் போர் புரிய தயாரானான். மாலை 4.55 மணி அளவில் சிங்கமுகாசூரனையும் முருகபெருமான் வேலால் வதம் செய்தார்.

சகோதரர்களின் இழப்பால் ஆத்திரம் அடைந்த ஆணவமே உருவான சூரபத்மனும் தனது படைவீரர்களுடன் முருகபெருமானுடன் போரிட வேகமாக வந்தான். முருகபெருமானை 3 முறை சுற்றி போரிட வந்த சூரபத்மனையும் மாலை 5.05 மணி அளவில் சுவாமி வேல் எடுத்து சம்ஹாரம் செய்தார். அப்போது வானத்தில் கருடன் 3 முறை சுற்றி வந்து வட்டமிட்டது.

இறுதியாக மாமரமும், சேவலுமாக உருமாறி வந்த சூரபத்மனை முருக பெருமான் சேவலும், மயிலுமாக மாற்றி தன்னுடன் ஆட்கொண்டார். மயிலை தனது வாகனமாகவும், சேவலை தனது கொடியாகவும் வைத்துக் கொண்டார்.

பின்னர் சினம் தணிந்த முருக பெருமானுக்கும், வள்ளி-தெய்வானை அம்பாள்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ், கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

வழக்கமாக கடற்கரையில் பல லட்சம் பக்தர்கள் மத்தியில் நடைபெறும் சூரசம்ஹாரம், இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் இன்றி, கடற்கரை நுழைவுவாயில் முகப்பில் எளிமையாக நடைபெற்றது. இதனால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் யு-டியூப் இணையதளத்திலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

7-ம் திருநாளான இன்று (சனிக்கிழமை) இரவில் சுவாமி-தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
Tags:    

Similar News