ஆன்மிகம்
தனி மனித இடைவெளியுடன் சாமி தரிசனத்திற்காக இருமுடி கட்டுகளுடன் காத்திருந்த காட்சி.

ஆரன்முளாவில் இருந்து சபரிமலைக்கு தங்க அங்கி ஊர்வலம் 22-ந் தேதி புறப்படுகிறது

Published On 2020-12-07 03:50 GMT   |   Update On 2020-12-07 03:50 GMT
சபரிமலை மண்டல பூஜைக்காக ஆரன்முளாவில் இருந்து தங்க அங்கி வருகிற 22-ந்தேதி அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்து ஊர்வலமாக சபரிமலைக்கு கொண்டு வரப்படுகிறது.
சபரிமலை :

மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 15-ந் தேதி திறக்கப்பட்டது. 16-ந்தேதி முதல் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.

இந்தநிலையில் சபரிமலையில் மண்டல பூஜை வருகிற 26-ந் தேதி நடைபெற உள்ளது. அப்போது ஐயப்பனுக்கு 453 பவுன் எடையிலான தங்க அங்கி அணிவித்து சிறப்பு பூஜை நடைபெறும். ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி, தற்போது பத்தனம்திட்டை மாவட்டம், ஆரன்முளா பார்த்த சாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அந்த தங்க அங்கி வருகிற 22-ந்தேதி அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்து ஊர்வலமாக சபரிமலைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த ஊர்வலம் ஆரன்முளா பார்த்த சாரதி கோவிலில் இருந்து புறப்படுகிறது. தங்க அங்கி ஊர்வலத்திற்கு வழக்கமாக, வழி நெடுகிலும் வரவேற்பு அளிக்கப்படும். தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, பக்தர்களின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் போலீசார் உள்பட அனைவருக்கும் கொரோனா இல்லை என்கிற சான்று கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. சபரிமலை செல்லும் வழியில் இரவு ஓய்வெடுக்கும் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டு உள்ளது. தங்க அங்கி ஊர்வலம் 25-ந் தேதி மதியம் பம்பை வந்து சேரும். பம்பையில் பாரம்பரிய முறைப்படி தேவஸ்தான ஊழியர்கள் தங்க அங்கியை பெற்றுக் கொண்டு, மேளதாளம் முழங்க சன்னிதானம் கொண்டு வருவார்கள்.

அவ்வாறு கொண்டு வரப்படும் தங்க அங்கியை பதினெட்டாம் படிக்கு கீழ் பகுதியில் தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் பெற்றுக்கொள்வார்கள். பின்னர் 18-ம் படி வழியாக சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்படும் தங்க அங்கி, மாலை 6.30 மணிக்கு, ஐயப்பனுக்கு அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

26-ந்தேதி பகல் 12 மணிக்கு மண்டல பூஜை, சிறப்பு வழிபாடு ஆகியவை நடைபெறுகிறது. அன்றைய தினம் சாமியை தரிசிக்க 6 ஆயிரம் பக்தர்களுக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் அனுமதி வழங்கி உள்ளது. அதன்பிறகு நடக்கும் பூஜைகளுக்கு பின் இரவு 9 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் 30-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். மகர விளக்கு பூஜை ஜனவரி 14-ந் தேதி நடைபெறும்.
Tags:    

Similar News