செய்திகள்
இலங்கை கடற்படை தாக்குதலில் பலியான மீனவர்கள்

இலங்கை கடற்படை தாக்குதலில் பலியான 4 ராமேசுவரம் மீனவர்கள் பற்றி உருக்கமான தகவல்

Published On 2021-01-22 10:12 GMT   |   Update On 2021-01-22 10:19 GMT
இலங்கை கடற்படை தாக்குதலில் பலியான 4 ராமேசுவரம் மீனவர்கள் பற்றி உருக்கமான தகவல் கிடைத்துள்ளது.

ராமேசுவரம்:

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மெசியா (வயது 30), உச்சிப்புளி வட்டாண் வலசை கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் (45), திருப்புல்லாணி ஒன்றியம் தாவனேந்தல் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் (28), மண்டபம் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த சாம்சன் (27) ஆகிய 4 மீனவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பகுதியிலிருந்து கடந்த 18-ந் தேதி மீன்பிடிக்க சென்றனர்.

நள்ளிரவில் கச்சத்தீவு அருகே இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டி அடித்தனர். மேலும் ஆத்திரம் அடைந்த இலங்கை கடற்படை 4 மீனவர்கள் வந்த விசைப்படகு மீது ரோந்து கப்பலை மோதியதாக கூறப்படுகிறது.

இதில் அந்த படகு சேதமடைந்து மூழ்கியது. படகில் இருந்த மெசியா, நாகராஜ், செந்தில்குமார், சாம்சங் ஆகிய 4 பேரும் கடலில் தத்தளித்தனர்.

மேலும் தாங்கள் வைத்திருந்த வயர்லெஸ் மூலம் உயிருக்கு ஆபத்து, காப்பாற்றுங்கள் என தொடர்ந்து குரல் எழுப்பினர். ஆனால் எந்த உதவியும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

இலங்கை கடற்படையும் மீனவர்களை கண்டு கொள்ளவில்லை. இதனால் 4 மீனவர்களும் கடலில் மூழ்கினர். அதன் பின்னர் அவரது கதி என்ன? என்று தெரியாமல் இருந்தது.

மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்பாததால் அவர்களது உறவினர்கள் கலக்கம் அடைந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் மாயமான 4 மீனவர்களை தேடும் பணியில்தமிழக கடலோர காவல்படை ஈடுபட்டது.

2 நாட்களுக்கு பிறகு இலங்கை யாழ்ப்பாணம் கடற்கரையில் 4 மீனவர்களின் உடல்கள் அடுத்தடுத்து கரை ஒதுங்கின.

மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் கொடூரமான தாக்குதலில் பலியானது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இலங்கை கடற்படை தான் 4 மீனவர்களையும் இரும்பு தடியால் தாக்கி கொலை செய்து உடல்களை கடலில் வீசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடற்படையின் இந்த கொலைவெறி தாக்குதலை கண்டித்து ராமேசுவரத்தில் மீனவர் சங்கங்கள் சார்பில் போராட்டம் நடந்தது.

இலங்கை கடற்படையின் இந்த செயலுக்கு மத்திய, மாநில அரசுகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.

நடுக்கடலில் உயிரிழந்த ராமேசுவரம் மீனவர்கன் பற்றி உருக்கமான தகவல் கிடைத்துள்ளது. அதன்விபரம் வருமாறு:-

பலியான தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மெசியாவின் பெற்றோர் அந்தோணிராஜ்- ஸ்டெல்லா மேரி ஆவார்கள். மெசியானுக்கு சைமன் என்ற சகோதரரும்,சந்தியா, கான்சிலான் என்று 2 சகோதரிகள் உள்ளனர்.இதில் சந்தியாவுக்கு திருமணம் ஆகிவிட்டது. சைமன், கான்சிலாவும் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டனர்.

இன்னும் சில மாதங்களில் மெசியானுக்கு திருமண ஏற்பாடுகள் செய்ய இருந்ததாகவும், அதற்குள் இந்த துயர சம்பவம் நிகழ்ந்து விட்டதாக பெற்றோர் கண்ணீர் மல்க கூறினர்.

உயிரிழந்த மற்றொரு மீனவரான சாம்சன் மண்டபம் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர். இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அவர் அங்கு சண்டை நடந்தபோது தப்பி அகதியாக இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

மண்டபம் அகதி முகாமில் தங்கியிருந்த சாம்சன் சில ஆண்டுகளுக்கு முன்பு அகதிகள் முகாமைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு தான் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் இருந்த சாம்சன் வருமானத்திற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற போது தான் தாக்குதலுக்கு உள்ளாகி பரிதாபமாக இறந்துள்ளார்

குழந்தை பிறந்த சில நாட்களில் சாம்சன் இறந்த சம்பவம் அவரது மனைவிக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் உச்சிப்புளி வட்டாண் வலசையை சேர்ந்த நாகராஜுக்கு மரகதம் (40) என்ற மனைவியும், முனீஸ்வரன், சரவண பாண்டி, உதயா ஆகிய 3 மகன்களும் உள்ளன. நாகராஜ் பலியானது அவரது குடும்பத்தையே நிலைகுலையச் செய்துள்ளது. அவரது பிரிவால் மகன்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது என மரகதம் சோகத்துடன் கூறினார்.

திருப்புல்லாணி தாவனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் குமாருக்கு ராஜூ (26) என்ற மனைவி உள்ளார் இவர்களுக்கு 3 வயதில் உதயா என்ற மகன் உள்ளான்.

செந்தில்குமார் இறந்த சம்பவம் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செந்தில் குமாரை நம்பிதான் அவரது குடும்பம் இருந்தது. தற்போது அவரை இழந்துவிட்டதால் கைக்குழந்தையுடன் என்ன செய்ய போகிறேன் என தெரியவில்லை என்று மனைவி ராஜூ கதறினார்.

இந்த நிலையில் பலியான 4 மீனவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. யாழ்பாணத்தில் 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நாளை ராமேசுவரம் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News