செய்திகள்
குஷ்புவை ஆதரித்து அமித்ஷா தலைமையில் நடைபெற்ற பேரணி

குஷ்புவை ஆதரித்து அமித்ஷா தலைமையில் சென்னையில் பேரணி

Published On 2021-04-03 09:38 GMT   |   Update On 2021-04-03 09:38 GMT
இரண்டாம் சாணக்கியரான அமித்ஷா தலைமையில் எழுந்துள்ள இந்த எழுச்சி நமது வெற்றியை உறுதி செய்துள்ளது என்று குஷ்பு கூறினார்.
சென்னை:

தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டி உள்ளது.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தமிழகத்தில் இறுதி கட்ட தேர்தல் பிரசாரத்துக்காக நேற்று இரவு சென்னை வந்தார்.

துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் வினோஜ் செல்வத்தை ஆதரித்து பிரசாரம் செய்ய சென்றார்.

ஆனால் இரவு 10 மணி ஆகி விட்டதால் தேர்தல் ஆணைய விதிப்படி பேசாமல் சைகை காட்டி ஆதரவு கேட்டபடி சென்றார். சவுகார்பேட்டை பகுதியில் அவரை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகள் செய்து இருந்தனர். அவர் பேச முடியாததால் அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர்.

இரவு கிண்டி நட்சத்திர ஓட்டலில் தங்கிய அமித்ஷா இன்று காலை 11 மணியளவில் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்புவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

இதையொட்டி பிரமாண்டமான ரோடு ஷோவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். காலை 11 மணியளவில் தேனாம்பேட்டை சிக்னலில் இருந்து திறந்த வாகனத்தில் பேரணியில் சென்றார்.

அங்கிருந்து பாண்டி பஜார் ரோடு வரை சென்று தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.



வேட்பாளர்கள் கே.பி. கந்தன் (வேளச்சேரி), ஜான் பாண்டியன் (எழும்பூர்), குஷ்பு (ஆயிரம்விளக்கு), சைதை துரைசாமி (சைதாப்பேட்டை) ஆகியோரும் அவருடன் இருந்தனர்.

குஷ்பு பேசும்போது, இரண்டாம் சாணக்கியரான அமித்ஷா தலைமையில் எழுந்துள்ள இந்த எழுச்சி நமது வெற்றியை உறுதி செய்துள்ளது. கருத்து கணிப்புகளை தவிடு பொடியாக்கி வென்று காட்டுவோம். வெற்றிவேல், வீரவேல் என்றார்.

பாண்டி பஜார் மா.பொ.சி. சிலை வரை சென்று திரும்பிய அமித்ஷா நெல்லை பிரசாரத்துக்கு புறப்பட்டு சென்றார்

இதில் தேர்தல் பணிக்குழு தலைவர் சக்கரவர்த்தி, இணை ஒருங்கிணைப்பாளர் கரு.நாகராஜன், தொகுதி ஒருங்கிணைப்பாளர் கராத்தே தியாகராஜன், பா.ஜனதா மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த் உள்பட பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News