ஆன்மிகம்
மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேக திருக்கோலத்தில் காட்சி தந்ததை படத்தில் காணலாம்.

மீனாட்சி அம்மனுக்கு நவரத்தின செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம்

Published On 2021-04-23 03:57 GMT   |   Update On 2021-04-23 03:57 GMT
மதுரை மீனாட்சி கோவில் சித்திரை திருவிழாவில் நேற்று இரவில் மீனாட்சி அம்மனுக்கு ராயர்கிரீடம் சூட்டி, நவரத்தின செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடந்தது. நாளை மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக கோவிலுக்குள் உள்திருவிழாவாக நடந்து வருகிறது.

விழாவின் 8-ம் நாளான நேற்று இரவு மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. இதையொட்டி காலை 8 மணிக்கு மீனாட்சி- சுந்தரேசுவரர் தங்க பல்லக்கில் எழுந்தருளி ஆடி வீதிகளை வலம் வந்தனர்.

பின்னர் இரவு 7 மணிக்கு மேல் பட்டாபிஷேக விழா அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் யாக சாலை பூஜையுடன் தொடங்கியது. சன்னதி முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பச்சை பட்டு உடுத்தி மரகத மூக்குத்தியுடன் எழுந்தருளிய மீனாட்சி அம்மனுக்கு, மனோரஞ்சித மலர் மாலை சாற்றி, தங்க, வைரத்தால் ஆபரணங்கள் பூட்டி சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர்.

அதை தொடர்ந்து ஸ்தானிக பட்டர்கள் செந்தில், ஹாலஸ் ஆகியோர் வேத மந்திரங்களை ஓதினர். வைரக்கற்கள் பதிக்கப்பட்ட ராயர் கிரீடம் என்னும் வைர கிரீடத்திற்கு காப்பு கட்டிய ரமேஷ் பட்டர் புனித நீரால் அபிஷேக தீபாராதனைகள் செய்தார். பின்பு 8.10 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் சூட்டி, நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட தங்கத்தினால் ஆன செங்கோல் வழங்கப்பட்டது.

அதை தொடர்ந்து மீனாட்சி அம்மனுக்கு பரிவட்டம் கட்டி, வேப்பம்பூ மாலை அணிவிக்கப்பட்டது. பிறகு மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதன்பின்னர் மீனாட்சி அம்மனிடமிருந்த செங்கோல், பட்டத்து அரசியின் பிரதிநிதியாக கோவில் தக்கார் கருமுத்து கண்ணனிடம் வழங்கப்பட்டது. அதனை அவர் பெற்று கொண்டு சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வலம் வந்து, மீண்டும் மீனாட்சிஅம்மனிடம் செங்கோலை கொடுத்தார்.

அதனை தொடர்ந்து மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து நான்கு ஆடி வீதிகளிலும் பவனி வந்து காட்சி தந்தார். அவருடன் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், வெள்ளி சிம்மாசனத்தில் வீதி உலா வந்தனர். இதன் மூலம் மதுரையில் இன்று முதல் மீனாட்சி அம்மனின் ஆட்சி தொடங்குகிறது.

பட்டாபிஷேக விழாவையொட்டி நேற்று மாலை 6.30 மணிக்கு மேல் பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் பக்தர்கள் இந்த விழாவை காண வேண்டும் என்பதற்காக கோவில் இணையதளம் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதன் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே தரிசனம் செய்தனர். மேலும் பட்டாபிஷேகத்தில் மீனாட்சி அம்மனை நேரில் காண முடியாத ஏக்கத்தில் ஏராளமான பக்தர்கள் கோவில் வாசலில் காத்திருந்தனர்.

பின்னர் ராணியான மீனாட்சி அம்மன் சிவபெருமானை போருக்கு அழைத்ததை நினைவூட்டும் திக்கு விஜயம் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் இன்று இரவு நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நாளை (சனிக்கிழமை) காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
Tags:    

Similar News