செய்திகள்
இடிந்து விழும் நிலையில் உள்ள சுற்றுச் சுவர்

சுற்றுசுவர் இடிந்து 17 பேர் பலி எதிரொலி - அபாயமாக உள்ள கட்டிடங்களை அகற்றாவிட்டால் குற்றவியல் நடவடிக்கை

Published On 2019-12-10 10:15 GMT   |   Update On 2019-12-10 10:15 GMT
அபாயகரமாக உள்ள கட்டிடங்களை 15 நாட்களுக்குள் இடித்து அகற்றாவிட்டால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவை:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூரில் சுற்றுசுவர் இடிந்து விழுந்து 17 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த கட்டிடத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

இதை தொடர்ந்து அரசுக்கு சொந்தமான பழைய கட்டிடங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் ஆபத்தான கட்டிடங்களை இடித்து அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார் கட்டிடமாக இருந்தால் அதன் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பபட்டு வருகிறது.

கோவை ராமநாதபுரம் ருக்மணி நகர் அருகே உள்ள குளத்து வாய்க்கால் பகுதியில் சுற்றுசுவர் இடியும் நிலையில் இருந்தது. இந்த இடத்தின் உரிமையாளர் வெளிநாட்டில் உள்ளதால் அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் வருவாய் துறையினர் முன்னிலையில் மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் சுற்றுசுவரை இடித்து அகற்றினர். மேலும் கோவை மாநகர பகுதிகளில் இடிந்து விழக்கூடிய ஆபத்தான கட்டடங்களை கண்டறிந்து எச்சரிக்கை நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை கோவை மாநகர பகுதிகளில் 42 கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ள அந்த நோட்டீசில் கூறி இருப்பதாவது:-

தங்களது கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே அருகில் உள்ள குடியிருப்புகள், குடியிருப்போர், சாலையில் செல்வோர் மீது விழுந்து உயிர் சேதம் ,பொருள் சேதம் ஏற்படக்கூடிய அபாய நிலையில் உள்ளது.

எனவே கோவை மாநகராட்சி சட்டம் 1981, பிரிவு 327 கீழ் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அபாயகரமாக உள்ள கட்டிடங்களை 15 நாட்களுக்குள் இடித்து அகற்ற வேண்டும். அல்லது யாரும் நுழையாத வகையில் வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும்.

இது குறித்து எழுத்து பூர்வமாக மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும்.

தவறினால் நீதிமன்றத்தில் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News