செய்திகள்
காந்தியின் தபால்தலை-உறையை இலங்கை துணை தூதர், தமிழக தலைமை தபால்துறை அதிகாரி பரிமாற்றம் செய்துகொண்ட காட்சி.

இந்தியா-இலங்கை இடையே காந்தி தபால்தலை பரிமாற்றம்

Published On 2019-10-04 20:24 GMT   |   Update On 2019-10-04 20:24 GMT
நல்லுறவு அடிப்படையில் இந்தியா-இலங்கை இடையே காந்தி தபால்தலை பரிமாற்றம் செய்யப்பட்ட விழா சென்னை தூதரக அலுவலகத்தில் நடைபெற்றது.
சென்னை:

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா (காந்தி ஜெயந்தி) கடந்த 2-ந் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது. மத்திய அரசு சார்பில் காந்தி சிறப்பு தபால்தலை-உறையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். பல்வேறு நாடுகளிலும் காந்தியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதன்படி இலங்கை அரசு சார்பில் கடந்த 2-ந் தேதி காந்தி சிறப்பு தபால்தலை-உறையை அந்நாட்டின் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே வெளியிட்டார்.

இந்த நிலையில் இருநாட்டு சார்பிலும் வெளியிடப்பட்ட காந்தியின் தபால்தலை-உறை பரிமாறி கொள்ளப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் இலங்கை துணை தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி, தமிழக தலைமை தபால்துறை அதிகாரி எம்.சம்பந்த், மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பி.கே.அசோக்பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

காந்தி ஜெயந்தியன்று இந்தியா-இலங்கை அரசு சார்பில் தனித்தனியாக வெளியிடப்பட்ட அவருடைய தபால்தலை-உறையை இலங்கை துணை தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியும், தலைமை தபால்துறை அதிகாரி எம்.சம்பந்தும் பரிமாற்றம் செய்து கொண்டனர்.

இலங்கை துணை தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி பேசும்போது, ‘இந்தியா-இலங்கை இடையே நல்லுறவை பேணிக்காக்கும் வகையில் நல்லிணக்க அடிப்படையில் காந்தியின் தபால்தலை பரிமாறப்பட்டுள்ளது. காந்தியின் அகிம்சை போராட்டத்தால் இந்தியாவுக்கு மட்டுமின்றி இலங்கைக்கும் ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் கிடைத்தது’ என்றார்.

தலைமை தபால்துறை அதிகாரி எம்.சம்பந்த் பேசுகையில், ‘இலங்கை அரசு காந்தியை கவுரப்படுத்துவது இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் மிகச்சிறந்த கவுரவமாகும். இதற்காக இலங்கை அரசுக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் இலங்கை தூதரக அதிகாரிகள் கிரிதரன், நீத்தா சந்திரசேனா, பிரசாந்தினி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News