செய்திகள்
சென்னை ஐகோர்ட்

அரியர் தேர்வு அட்டவணை தாக்கல் செய்ய வேண்டும்- பல்கலைக்கழகங்களுக்கு, ஐகோர்ட் உத்தரவு

Published On 2021-01-12 02:14 GMT   |   Update On 2021-01-12 06:31 GMT
தமிழகத்திலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் அரியர் தேர்வு நடத்துவது தொடர்பான தேர்வு அட்டவணையை வருகிற பிப்ரவரி 4-ந்தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன், முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி ஆகியோர் தனித்தனியாக வழக்குத் தொடர்ந்து இருந்தனர்.

இந்த வழக்குகளுக்கு பதில் அளித்த அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு, அரியர் தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்தது விதிகளுக்கு முரணானது என்று கூறியிருந்தது.

ஆனால், அரியர் தேர்வுகளை ரத்து செய்து, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சிப் பெற்றதாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பில் விதிமீறல்கள் எதுவும் இல்லை என்று தமிழ்நாடு உயர்கல்வித்துறை பதில் மனு தாக்கல் செய்தது.

இதற்கிடையில் வக்கீல் ராம்குமார் ஆதித்தன் ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் அரியர் தேர்வு நடத்தாமல் அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு வெளியிட உள்ளது அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ, பல்கலைக்கழகங்கள் அரியர் தேர்வுகளை நடத்த வேண்டும். அரியர் தேர்வுகளை நடத்தாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில், மாணவர்கள் நலன் கருதியே அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டது. தற்போதைய நிலையில் கொரோனா சூழல் மாறியுள்ளதால் பல்கலைக்கழகங்கள் ஐகோர்ட்டு உத்தரவுப்படி, தேர்வுகளை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், அரியர் தேர்வு தொடர்பான தேர்வு அட்டவணையை அனைத்து பல்கலைக்கழகங்களும் வரும் பிப்ரவரி 4-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.
Tags:    

Similar News