செய்திகள்
தொடர் மழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

கேரளாவில் கனமழை: முல்லைப்பெரியாறு அணை 2½ அடி உயர்வு - சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு

Published On 2021-10-17 04:45 GMT   |   Update On 2021-10-17 04:45 GMT
கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் முல்லைப்பெரியாறு அணையில் நீர்வரத்து அதிகரித்து ஒரே நாளில் 2½ அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

கூடலூர்:

அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதால் கேரளாவில் இடுக்கி உள்பட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதன்படி இடுக்கி மாவட்டத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டது.

எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்ததால் பொதுமக்கள் வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்த நிலையில் இடுக்கி மாவட்டத்திற்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழையால் நேற்று 1435 கன அடியாக ஆக இருந்த நீர்வரத்து இன்று காலை 7815 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2½ அடி உயர்ந்துள்ளது. நேற்று 128.90 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 131.30 அடியாக உயர்ந்துள்ளது.

அணையில் இருந்து 1300 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

வைகை அணையின் நீர்மட்டம் 55.68 அடியாக உள்ளது. 1265 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1119 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.60 அடியாக உள்ளது. 53 கன அடி நீர் வருகிறது. 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. வருகிற 30 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

தேனி மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சுருளி அருவி கும்பக்கரை அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அரிசிபாறை, ஈத்தைப்பாறை ஓடைகளில் மழை நீர் அதிகரித்து சுருளி அருவிக்கு மரம், செடி கொடிகள் இழுத்து வரப்பட்டன. மேலும் இதில் பாறைகளும் உருண்டு வந்தன. கொரோனா ஊரடங்கால் ஏற்கனவே பொதுமக்கள் சுருளி அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் வெறிச்சோடி காணப்பட்டது. இங்கு பொதுமக்கள் செல்லாதவாறு வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

பெரியாறு 170, தேக்கடி 126.6, கூடலூர் 77.4, சண்முகாநதி அணை 38.7, உத்தமபாளையம் 31.2, வீரபாண்டி 32, வைகை அணை 7.8, மஞ்சளாறு 7, மருதாநதி 12.6, சோத்துப்பாறை 6, கொடைக்கானல் 15.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. 

Tags:    

Similar News