செய்திகள்
தடுப்பூசி மருந்து (கோப்புப் படம்)

டைபாய்டு காய்ச்சலுக்கு புதிய தடுப்பூசியை அறிமுகப்படுத்திய முதல் நாடு

Published On 2019-11-16 05:59 GMT   |   Update On 2019-11-16 05:59 GMT
உலகிலே முதல் முறையாக டைபாய்டு காய்ச்சலை குணமாக்க புதிய தடுப்பூசி மருந்தை பாகிஸ்தான் அறிமுகப்படுத்தியிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமாபாத்:

கொசுக்களினால் பல்வேறு அபாயகரமான நோய்கள் ஏற்படுகின்றன. டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்களால் உயிரிழந்தோர் பலர். அதுபோல மற்றொரு உயிர்க்கொல்லி நோய் டைபாய்டு காய்ச்சல். இது சால்மொனெல்லா டைபி என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் நடுத்தர மற்றும் இந்தியா, பாகிஸ்தான் போன்ற வளர்ந்து வரும் நாடுகளில், குறிப்பாக மழை நேரங்களில் இந்நோய்கள் அதிக அளவில் ஏற்படுகின்றன.

கடந்த 2016ம் ஆண்டு பாகிஸ்தானில் டைபாய்டு காய்ச்சல் அதிக அளவில் பரவியது. நாடு முழுவதும் 11 ஆயிரம் மக்கள் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக சிந்து மாகாணத்தில் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். இந்த காய்ச்சலினால் இறப்பு விகிதம் 20 சதவீதம் உயரக்கூடும் என வல்லுநர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், கராச்சியில் மருத்துவ துறை மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட ஒரு விழாவில், ‘டைபாய்டு தடுப்பூசி’ (டி.சி.வி) அறிமுகப்படுத்தப்பட்டது. சுகாதாரத்துக்கான பிரதமரின் சிறப்பு உதவியாளர் ஜாபர் மிர்சா மற்றும் மாகாண சுகாதார அமைச்சர் அஸ்ரா ஃபசல் பெச்சுஹோ ஆகியோர் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இது குறித்து ஜாபர் மிர்சா கூறுகையில், ‘கடந்த 2017ம் ஆண்டு டைபாய்டு காய்ச்சல் பாதிப்பால் இறந்தவர்களில் அதிகமானோர் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள்தான். தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய தடுப்பூசி உலக சுகாதார அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டது. வரும் நவம்பர் 18 முதல் 30ம் தேதி வரை சிந்து மாகாணத்தில் உள்ள நகர்ப்புறங்களில் மேற்கொள்ளப்படும் நோய்த்தடுப்பு பிரச்சாரத்தின் போது இது பயன்படுத்தப்படும்.

அதன் பிறகு பாகிஸ்தான் அரசு நாடு முழுவதும் இந்த தடுப்பூசி பயன்பாட்டை விரிவு படுத்தும். பிரச்சார முறை மூலம் டைபாய்டுக்கான புதிய தடுப்பூசியை தனது வழக்கமான நோய்த்தடுப்பு திட்டத்தில் அறிமுகப்படுத்திய உலகின் முதல் நாடு பாகிஸ்தான்’, என கூறினார்.
Tags:    

Similar News