ஆன்மிகம்
மகாநந்திக்கு அபிஷேகம் நடைபெற்றதையும்,பக்தர்கள் இன்றி பெரிய கோவில் வெறிச்சோடி காட்சியளித்ததையும் காணலாம்.

தஞ்சை பெரிய கோவிலில் 12-வது முறையாக பக்தர்கள் இன்றி நடைபெற்ற பிரதோஷ வழிபாடு

Published On 2020-08-31 04:21 GMT   |   Update On 2020-08-31 04:21 GMT
கொரோனா வைரசை தடுக்க கோவில் மூடப்பட்டதையடுத்து 12-வது முறையாக பக்தர்கள் இன்றி தஞ்சை பெரியகோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவில் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த கோவிலில் 23 ஆண்டுகளுக்குப்பிறகு கடந்த பிப்ரவரி மாதம் 5-ந்தேதி குடமுழுக்கு நடைபெற்றது. அதன் பின்னர் பக்தர்களின் கூட்டமும் அதிக அளவில் காணப்பட்டது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதையடுத்து தஞ்சை பெரியகோவிலை மூட தொல்லியல் துறை உத்தரவிட்டது. அதன்படி கடந்த மார்ச் மாதம் 18-ந்தேதி முதல் மூடப்பட்டது. அன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் கோவிலில் வழக்கமாக நடைபெறும் 4 கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த கோவிலில் உள்ள நந்திக்கு பிரதோஷ வழிபாட்டின் போது பால், சந்தனம், மஞ்சள், தேன் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் கோவில் மூடப்பட்டதால் கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி முதன்முறையாக பக்தர்கள் இன்றி பிரதோஷம் நடைபெற்றது. அதன் பின்னர் ஏப்ரல் மாதம் 5, 20-ந்தேதியும், மே மாதம் 5, 20-ந்தேதியும், ஜூன் மாதம் 3, 18-ந்தேதியும் நந்திக்கு பிரதோஷ அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் ஜூலை மாதம் 2, 18-ந்தேதியும், இந்த மாதம் கடந்த 1, 16-ந்தேதியும் நந்திக்கு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. கோவில் மூடப்பட்டதால் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை. கோவில் பணியாளர்கள் மற்றும் சிவாச்சாரியர்கள் மட்டும் இருந்தனர்.

வழக்கமாக பிரதோஷ வழிபாட்டின் போது பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். அதிலும் சனி பிரதோஷத்தின் போது வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்படும். அந்த நாளில் பெரியகோவில் பகுதியில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்படும். ஆனால் கடந்த 11 முறை பக்தர்கள் இன்றி பெரியகோவிலில் பிரதோஷ அபிஷேகம் நடைபெற்றது.

நேற்று 12-வது முறையாக பக்தர்கள் இன்றி பிரதோஷம் நடைபெற்றது. இது இந்த மாதத்தில் 3-வது முறையாக நடைபெறும் பிரதோஷ வழிபாடு ஆகும். இந்த நிலையில் அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்ததையடுத்து கோவில்களையும் பக்தர்கள் வழிபாட்டிற்கு திறக்க அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து இனி வரும் பிரதோஷ வழிபாடுகளில் பக்தர்கள் பங்கேற்பார்கள்.
Tags:    

Similar News