செய்திகள்

டாக்டர்கள் ஸ்டிரைக்கால் நோயாளிகள் பாதிப்பு: சுகாதார செயலாளர் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2017-05-05 07:28 GMT   |   Update On 2017-05-05 07:28 GMT
அரசு மருத்துவர்கள் போராட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆஜராகும் படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டில், ஏ.கே.வேலன் என்பவர் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார்.

அதில், ‘முதுகலை மருத்துவ பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவினால், தங்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்படுகிறது என்று கூறி தமிழகம் முழுவதும் டாக்டர்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டாக்டர்கள் பணிக்கு வராததால், நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த நோயாளிகளின் நோயின் தன்மையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

மேலும், நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய மறுத்து டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால், அந்த நோயாளிகள் கடுமையாக வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.

சென்னை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் போராட்டத்தால் சிகிச்சை பெற முடியாமல் காத்திருக்கும் புற நோயாளிகள்.

அதுமட்டுமல்லாமல், கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில், டாக்டர்கள் பணிக்கு வருவதில்லை. இதனால், உடல் நலம் பாதிக்கப்பட்ட மக்கள் கடுமையான துன்பத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த டாக்டர்கள் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மக்கள் படும் வேதனையை வேடிக்கை பார்த்து வருகிறது.

இதுகுறித்து இந்த ஐகோர்ட்டு தகுந்த உத்தரவினை பிறப்பிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வெங்கட்ரமணி ஆஜராகி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

இதையடுத்து அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ‘டாக்டர்கள் பணி என்பது பொது சேவையாகும். இவர்கள் பணிக்கு செல்லாமல் சாலையில் அமர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்துகின்றனர்.

இதனால், நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை நோயாளிகளால் தனியார் ஆஸ்பத்திரிக்கு பெரும் தொகை கொடுத்து சிகிச்சை பெற முடியுமா? இந்த அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர ஏன் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை?

இந்த வழக்கு விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைக்கிறேன். அப்போது தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டார்கள்.
Tags:    

Similar News