செய்திகள்
திருச்சி கோர்ட்டில் ஆஜராகிவிட்டு சீமான் வெளியே வந்த காட்சி.

அரை மணி நேரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றுபவர் இவர்- சீமான் பேட்டி

Published On 2019-11-13 07:45 GMT   |   Update On 2019-11-13 07:45 GMT
நடிகர் ரஜினிகாந்த் அரை மணி நேரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிவிடுவார் என்று திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருச்சி:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 19-ந்தேதி திருச்சிக்கு விமானத்தில் வந்தார். அவரை வரவேற்பதற்காக அந்த கட்சியினர் திருச்சி விமான நிலையத்தில் காத்திருந்தனர். அதேபோல் அதே விமானத்தில் வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை வரவேற்பதற்காக அந்த கட்சியினரும் அங்கு காத்திருந்தனர்.

அப்போது இரு கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இரு கட்சிகளை சேர்ந்தவர்கள் மீது திருச்சி விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-6 கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு கடந்த 4-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான சீமான் மற்றும் 14 பேரிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. அது தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது. இதில் சீமான் உள்பட கட்சி நிர்வாகிகள் 14 பேரும் ஆஜரானார்கள்.

அப்போது சீமானிடம் நீதிபதி, குற்றப்பத்திரிகையில் சட்ட விரோதமாக கூடி கலவரம் விளைவித்தல், தகாத வார்த்தைகளால் திட்டுதல், உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லி இருக்கிறார்களே, அது உண்மையா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சீமான், அது முழுக்க முழுக்க பொய் வழக்கு என்றார். இதையடுத்து வழக்கு விசாரணையை ஜனவரி 7-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். பின்னர் கோர்ட்டில் இருந்து வெளியே வந்த சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைப்பதற்காக 18 நாட்கள் காத்திருந்த கவர்னர் ஒரே ஒரு நாளில் அந்த நாள் முழுமை அடைவதற்கு முன்பே ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த கவர்னர் பரிந்துரை செய்துள்ளார். இது பா.ஜ.க.வின் திட்டமிட்ட செயல்.

டாடா அறக்கட்டளையிடம் இருந்து ரூ.365 கோடி பா.ஜ.க.வினர் பெற்றதாக புகார் எழுந்ததாக சொல்கிறார்கள். இந்த வி‌ஷயத்தில் தலைவர்கள் தொடர்ந்து மவுனம் சாதிக்கிறார்கள். லஞ்சம், ஊழலை ஒழிப்போம் என்று சொன்ன இவர்கள் அம்பானி, அதானி போன்றோர்களை வளர்க்கின்றனர்.

ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் வரிகள் அச்சடிக்கப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். அதனால் எந்த பயனும் இல்லை. அதனை யாரும் படிக்க வாய்ப்பில்லை. பாலை ஊற்றிவிட்டு கவரை கிழித்து எறிந்துவிடுவார்கள். பள்ளி பாட புத்தகங்கள் மூலமாக கற்பிப்பதே சிறந்த வழியாக இருக்கும்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அமெரிக்காவில் விருது வழங்கப்பட்டுள்ளதன் மூலம் பெருமை அடைகிறேன். அவர் நம்மாளுதான். இங்கு தகுதியுடைவர்களுக்கு மட்டும் தான் முனைவர் பட்டம் வழங்கப்படுகிறதா? தனி மரம் தோப்பாகாது என்று சொல்கிறார்கள். நான் தனி மரம் கிடையாது. எங்களுக்கு 15 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.

நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால் சிவாஜி நிலைதான் ஏற்படும் என்று முதல்வர் கூறியிருப்பது ஏற்புடையது அல்ல. சிவாஜியை சிறுமைப்படுத்தி இருக்கக்கூடாது. உலகின் தலைசிறந்த நடிகர் சிவாஜி. அரசியலில் அவருக்கு எந்தவித எதிர்பார்ப்போ, நுட்பமோ இருக்கவில்லை. எம்.ஜி.ஆர். 100 படங்களுக்கு மேல் குறிப்பாக, விவசாயி, பட கோட்டி என பல்வேறு படங்களில் திட்டமிட்டு நடித்து அரசியலுக்கு வந்தார். அப்போது கலைஞர் மட்டும் தான் ஆளுமைமிக்க தலைவராக இருந்தார். அதனால் தான் அவரால் வெற்றிபெற முடிந்தது.


அதற்காக சிவாஜியை சிறுமைப்படுத்தி இருக்க கூடாது. தன்மீது காவி சாயம் பூசமுடியாது என்று கூறிய ரஜினி, தனது நிலைப்பாட்டில் அரைமணி நேரம் கூட உறுதியாக நிற்கமுடியவில்லை. அரை மணி நேரம் கழித்து பத்திரிகையாளர்களை சந்திக்கும்போது, அந்த விவகாரத்தில் பூசி மொழுகி இருக்கிறார். வயது மூப்பின் காரணமாக அரசியலுக்கு வருகின்றனர் என்று முதல்வர் கூறியதில் எனக்கு உடன்பாடு உண்டு.

கருணாநிதி, ஜெயலலிதா என இரண்டு ஆளுமை மிக்க தலைவர்கள் இருந்த போதுதான் விஜயகாந்த் அரசியலுக்கு வந்தார். ஆனால் ரஜினி வெற்றிடம் இருப்பதால் அரசியலுக்கு வருகிறேன் என்கிறார். ஆளுமை இருந்திருந்தால் அவர் வந்திருக்க மாட்டார். 1996-ல் கலைஞர், மூப்பனார் கொடுத்த நெருக்கடி காரணமாக ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தார். அதன் பிறகு தமிழகத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லையா? எதற்குத்தான் அவர் குரல் கொடுத்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News