ஆன்மிகம்
விநாயகர், சந்திரசேகரர் உற்சவ உலா நடந்த போது எடுத்தபடம்.

3-ம் நாள் தீபத் திருவிழா: விநாயகர், சந்திரசேகரர் உற்சவ உலா நடந்தது

Published On 2020-11-23 03:15 GMT   |   Update On 2020-11-23 03:15 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 3-ம் நாள் தீபத்திருவிழாவை முன்னிட்டு விநாயகர், சந்திரசேகரர் உற்சவ உலா நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 20-ந் தேதி கார்த்திகை மகாதீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று 3-ம் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று காலை கோவிலில் விநாயகருக்கும், சந்திரசேகருக்கும் திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க விநாயகரும், சந்திரசேகரரும் கோவிலில் 3-ம் பிரகாரத்தில் வலம் வந்து அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு எழுந்தருளினர்.

அங்கிருந்து 5-ம் பிரகாரத்திற்கு கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் உள்ள வாகனங்களில் விநாயகரும், சந்திருசேகரரும் எழுந்தருளினர். சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டபோது கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க கோவில் 5-ம் பிரகாரத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகர் உலா நடைபெற்றது.

மேலும் கோவிலில் 1008 சங்காபிஷேகம் மற்றும் மகா யாகம் நடைபெற்றது. முன்னதாக 1008 சங்குகளில் புனித நீர் ஊற்றி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மகா யாகம் முடிந்த பிறகு புனிதநீர் கொண்டு அருணாசலேஸ்வருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும் கோவிலில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இரவு சுமார் 9 மணியளவில் கோவில் வளாகத்தில் பஞ்சமூர்த்திகள் உற்சவ உலா நடைபெற்றது.
Tags:    

Similar News