செய்திகள்
ரத்து

குடிபோதையில் பைக் ஓட்டியதால் 10 சதவீத இழப்பீடு ரத்து

Published On 2019-07-25 10:45 GMT   |   Update On 2019-07-25 10:45 GMT
குடிபோதையில் பைக் ஓட்டி விபத்தில் காயமடைந்தவருக்கு 10 சதவீத இழப்பீட்டை ரத்து செய்தது மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

சென்னையைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். வீடு புரோக்கர்.

இவர் கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி தனது சகோதரருடன் மோட்டார்சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்றார். வடபழனி ஆற்காடு சாலையில் சென்று கொண்டிருந்தபோது இவர்களது மோட்டார்சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக வந்த ஒரு ஆட்டோ ரிக்‌ஷா மோதியது.

இந்த விபத்தில் சுரேஷ் குமார் படுகாயம் அடைந்தார். அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரது கழுத்து, கைகள் உடைந்து சேதமடைந்து இருந்ததால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் 50 நாட்கள் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றார்.

எனினும் அவரால் முழுமையாக விபத்தில் இருந்து மீள முடியவில்லை. 47 சதவீத இயலாமை நிலையில் இருப்பதாக டாக்டர்கள் சான்றிதழ் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து சுரேஷ் குமார் தனக்கு விபத்து இழப்பீடாக ரூ.51 லட்சம் வழங்க கோரி சென்னையில் உள்ள மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயத்தில் மனு அளித்தார். இதை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி உமா மகேஸ்வரி, ஆட்டோ டிரைவர் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்ததால் விபத்து ஏற்பட்டதை ஏற்றுக் கொண்டார்.

எனினும் விபத்து தொடர்பாக டாக்டர் அளித்த பதில்களின் அடிப்படையில் சுரேஷ் குமாருக்கு இழப்பீடாக ரூ.4 லட்சத்து 41 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.

அதே நேரம் விபத்து நடந்தபோது சுரேஷ்குமார் மதுபோதையில் இருந்ததும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை குறிப்பிட்ட தீர்ப்பாயம், இழப்பீட்டு தொகையில் இருந்து 10 சதவீதத்தை கழித்து மீதி ரூ.3 லட்சத்து 97 ஆயிரம் மட்டும் வழங்குமாறு உத்தரவிட்டது.
Tags:    

Similar News