செய்திகள்
போக்குவரத்து நெரிசல் (கோப்புப்படம்)

சென்னை புறநகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

Published On 2021-01-18 08:02 GMT   |   Update On 2021-01-18 08:02 GMT
சென்னை புறநகர் பகுதிகளான காட்டாங்கொளத்தூர், மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
செங்கல்பட்டு:

பொங்கல் - தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்த பொங்கலுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்ததால் கடந்த 13-ந் தேதி சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பெரும்பாலானவர்கள் கார்களில் பயணமானார்கள்.

இதனால் பொங்கலுக்கு முந்தைய நாளான அன்று சென்னை புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பொங்கல் விடுமுறை முடிந்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இன்று ஒரே நேரத்தில் பலர் கார் மற்றும் பஸ்களில் பயணமானார்கள்.

பள்ளிக்கூடங்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) திறக்கப்படுவதால் இதுநாள் வரை சொந்த ஊர்களில் இருந்தவர்களும் சென்னைக்கு திரும்பினார்கள்.

இதன் காரணமாக இன்று அதிகாலையில் இருந்தே செங்கல்பட்டு பரனூர் சோதனைச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ், போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் ஆகியோர் நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர்.

பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் தீரும் வரை சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என்று அறிவிக்கப்பட்டது. இதனால் இன்று காலை வரையில் சுங்கச்சாவடிகளில் நிற்காமலேயே வாகனங்கள் சென்றன. இதையடுத்து அங்கு நெரிசல் குறைய தொடங்கியது.

ஆனால் சென்னை புறநகர் பகுதிகளான காட்டாங்கொளத்தூர், மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இன்று காலை 10 மணி வரையிலும் வாகனங்கள் அணிவகுத்து வந்தன.

சென்னையின் நுழைவு பகுதியான சிங்கப்பெருமாள் கோவிலில் அதிகளவு நெரிசல் காணப்பட்டது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் அதனை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

குறிப்பாக 4 முனை சந்திப்புகளில் வாகனங்கள் எந்த பக்கமும் செல்ல முடியாத அளவுக்கு நெரிசல் அதிகமாகவே காணப்பட்டது.
Tags:    

Similar News