செய்திகள்
திக்ரி எல்லையில் லாரிகளை தடுத்து நிறுத்திய போலீசார்

அச்சுறுத்தும் காற்று மாசு- டெல்லி நகருக்குள் லாரிகள் நுழைய தடை

Published On 2021-11-18 10:39 GMT   |   Update On 2021-11-18 12:16 GMT
காற்றுத் தர மேலாண்மை ஆணையம் வழங்கிய குறிப்பிட்ட நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என போக்குவரத்து காவல் துறை சிறப்பு ஆணையர் தெரிவித்தார்.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அபாய நிலையிலேயே உள்ளது. காற்று மாசை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நவம்பர் 21ம் தேதி வரை கட்டுமானம், இடிப்பு பணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் அரசுத் துறைகளின் ஊழியர்கள் வீட்டிலிருந்து 100 சதவீதம் வேலை செய்யவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. 

இந்நிலையில், வாகனங்களால் ஏற்படும் புகையின் அளவை குறைக்கும் வகையில், டெல்லி நகருக்குள் வரும் 21ம் தேதி வரை லாரிகள் நுழைய அனுமதி கிடையாது என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்கு, காற்றுத் தர மேலாண்மை ஆணையம் வழங்கிய குறிப்பிட்ட நடைமுறைளை, சம்பந்தப்பட்ட அமைப்புகள் மற்றும் துறைகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என போக்குவரத்து காவல் துறை சிறப்பு ஆணையர் மணீஷ் குமார் அகர்வால் தெரிவித்தார்.

அனைத்து லாரி தொழிற்சங்கங்கள், உரிமையாளர்கள் மற்றும்  லாரி டிரைவர்கள் தங்களது வாகனங்களை டெல்லி எல்லைக்கு வெளியே உள்ள குடோன்கள், போக்குவரத்து மையங்கள் போன்ற பொருத்தமான இடங்களில் நவம்பர் 21 ஆம் தேதி வரை தங்கள் சொந்த ஏற்பாட்டில் நிறுத்திக்கொள்ள வேண்டும். காற்று தர நிர்வாக ஆணையத்தால் அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அல்லது டெல்லி அரசு தெரிவிக்கும்வரை டெல்லிக்குள் வாகனங்களை இயக்கக்கூடாது எனவும்  சிறப்பு ஆணையர் மணீஷ் குமார் அகர்வால் கூறினார்.
Tags:    

Similar News