செய்திகள்
கைதானவர்களை படத்தில் காணலாம்.

ஆன்லைன் மூலம் பணமோசடி-வாலிபர்கள் 2 பேர் கைது

Published On 2021-07-18 10:57 GMT   |   Update On 2021-07-18 10:57 GMT
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அருண்ராஜ் இது குறித்து குடிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள குடிமங்கலத்தை சேர்ந்தவர் அருண்ராஜ். கோழி கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அவரது கடைக்கு 2 பேர் காரில் வந்தனர். 

அவர்கள் நாங்கள் மதுரை வரை செல்ல வேண்டும். பணம் வைத்திருந்த பர்ஸ் தொலைந்து விட்டது. டீசல் போட எங்களிடம் கையில் பணம் இல்லை. நீங்கள் பணம் தந்து உதவுங்கள். உங்களுக்கு ஆன்லைன் மூலம் வங்கி கணக்கில் பணம் செலுத்தி விடுகிறோம் என்றனர்.

2 பேரும் வற்புறுத்தி கேட்டதால் அருண்ராஜ் தன்னிடமிருந்த ரூ.5 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார். அதன் பின்னர் அருண்ராஜ் செல்போனிற்கு  பணம் வங்கியில் செலுத்தப்பட்டதற்கான போலியான எஸ்.எம்.எஸ். தகவலை அனுப்பியுள்ளனர். 

அதனை அருண்ராஜூம் நம்பிவிட்டார். இதையடுத்து 2 பேரும் காரை எடுத்து விட்டு சென்று விட்டனர். அதன்பிறகு அருண்ராஜ் தனது வங்கி கணக்கை  சரிபார்த்த போது அதில் பணம் ஏதும் செலுத்தவில்லை என்பதும், தனக்கு அனுப்பப்பட்டது போலி எஸ்.எம்.எஸ். என்பதும் தெரியவந்தது. 
 
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அருண்ராஜ் இது குறித்து குடிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி நூதன மோசடியில் ஈடுபட்டகோவையை சேர்ந்த கவுதம் (வயது 28), சாமுவேல் (வயது 25) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் டி.எஸ்.பி தேன்மொழி வேல் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இதுபோல் பல நபர்களிடம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.  

இது குறித்து உடுமலை டி.எஸ்.பி. தேன்மொழிவேல் கூறுகையில்,இதுபோன்ற வழிப்பறி கொள்ளையர்கள், தங்களை வசதிபடைத்தவர்கள் போல் காட்டி கொண்டு மக்களிடம் ஏமாற்றி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. கொள்ளையர்கள் சொகுசாக வாழ இப்படி பொதுமக்களை ஏமாற்றுகின்றனர். பொதுமக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்றார். 
Tags:    

Similar News